COVID-19 என்பது உங்கள் நுரையீரல் மற்றும் சுவாச குழாயை தாக்கும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் ஆகும்.
அறிகுறிகள்
காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, கடும் சோர்வு, வயிற்றுப் போக்கு ஆகியவைதான் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பரிசோதனை மூலம்தான் அந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடிகிறது.
பரவுதல்
COVID-19 திரவதுளிகள் மூலம் மனிதருக்கு மனிதர் பரவுகிறது.நோய்தொற்று ஏற்பட்ட ஒரு நபர் இருமும்போதும் தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வைரஸ் கொண்ட திரவதுளிகளை பரவ செய்யலாம். இந்த திரவதுளிகள் அளவில் பெரிதாக இருப்பதால் காற்றில் இவற்றால் நீண்ட நேரம் தங்க முடியாது. எனவே அவை சுற்றியுள்ள மேற்பரப்புகளில் வீழ்ந்து படிகின்றன.
இரண்டு வகை கொரோனா பரிசோதனைகள் இருக்கின்றன. ஒன்று RT-PCR மற்றொன்று ஆன்டிஜென் எனப்படும் எதிர்ப்பொருள் பரிசோதனை.
உங்களில் யாருக்காவது கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகளும் இருந்து, இந்தப் பரிசோதனைகளில் நெகட்டிவ் முடிவு வந்திருக்கிறதா? சிலருக்கு வந்திருக்கலாம். "False Positive" மற்றும் "False Negative" போன்ற சொற்களை மருத்துவர் மூலமாக நீங்கள் கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள்.
அனைத்து அறிகுறிகளும் இருந்தபோதும் பரிசோதனை முடிவு மட்டும் நோய்த் தொற்று இல்லை எனக் காட்டுவது ஏன்?
RT-PCR பரிசோதனை
Real Time Reverse Transcription Polymerase Chain Reaction என்பதன் சுருக்கம்தான் RT-PCR.சுருக்கமாக இதை "சளி பரிசோதனை" எனலாம்.RT-PCR பரிசோதனையில், மூக்கு அல்லது தொண்டையில் இருந்து, நுனியில் பஞ்சு கொண்ட ஒரு குச்சி மூலமாக எடுக்கப்பட்ட சளி மாதிரி, திரவம் உள்ள சிறு குழாயில் கரைக்கப்படுகிறது. பஞ்சு மூலம் எடுக்கப்பட்ட சளியில் இருந்த வைரஸ் இப்போது குழாயில் உயிர்ப்பு நிலையில் இருக்கும். அந்தக் குழாய் ஆய்வுக்காக பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படும்.RT-PCR பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
False Negative
முக்கியமான அனைத்து அறிகுறிகளும் இருந்தபோதும், பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவுகள் வருவதை "False Negative" என்கிறார்கள்
காய்ச்சல், சளி, இருமல், உடல் வி போன்ற கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தும் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வருவதற்கு 4 முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.அவை
சளி மாதிரி எடுக்கும் நடைமுறையில் ஏற்படும் சில தவறுகள்
தவறான முறையில் சளி மாதிரி எடுக்கப்படுவது
வைரஸ் உயிர்ப்புடன் இருப்பதற்கு தேவையான அளவை விட குறைவான திரவம் இருப்பது
முறையற்ற வகையில் சளி மாதிரிகள் பரிசோதனைக் கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது
சில நேரங்களில் உடலில் உள்ள வைரஸின் அளவு மிகக் குறைவாக இருக்கும். அப்போது அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வரும் வாய்ப்புள்ளது.
பரிசோதனைக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பதும், எதையாவது உண்பதும் பரிசோதனை முடிவைப் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தொற்று இருக்கும் ஒருவருக்கு "இல்லை" என முடிவு வரக்கூடும் என்கிறார்கள்.
"கொரோனா அறிகுறிகள் இருந்து, பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தால், 5 அல்லது 6 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்" என்கின்றனர் மருத்துவர்கள்.முதல் பரிசோதனை முடிவு நெகட்டிவ் வந்த பிறகும், அறிகுறிகள் இருந்தால் சிகிச்சையைத் தொடர வேண்டும். மீண்டும் நெகட்டிவ் வந்தால். CT-Scan மூலமாக அறிகுறிகளைக் கண்டுபிடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
False Positive
கொரோனா தொற்று இல்லாதவருக்கு தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகள் வருவதுதான் "False Positive".
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அதில் இருந்து மீண்டு வந்த பிறகும் அவருக்கு தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவு வர வாய்ப்புண்டு. அப்படிப்பட்டவர்களின் உடலில் உயிர்ப்பில்லாத கொரோனோ வைரஸ் இருக்கும். குணமடைந்து ஒரு மாதத்துக்குள்ளாக பரிசோதனை செய்தால், அவருக்கு கொரோனா இருப்பதாக முடிவு வரக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் RT-PCR உபகரணம் இரண்டு மரபணுக்களைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் வைரஸ் திரிபு அடைந்தாலும் சோதனையில் தென்படாமல் போகாது. RT-PCR பரிசோதனை துல்லியமானது" என இந்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
HRCT பரிசோதனை
High Resolution CT Scan என்பதன் சுருக்கம்தான் அது. X-Ray பரிசோதனையில் புலப்படாமல் போகும் பாதிப்புகளைக் இந்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். நோயாளியின் மார்புப் பகுதியில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை முப்பரிமாண வடிவில் இந்தப் பரிசோதனை காட்டிவிடும்.நோயாளி தொடர்ந்து இருமினாலோ, மூச்சுத் திணறல் ஏற்பட்டோலோ, ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ இந்தப் பரிசோதனை மூலமாக பாதிப்பின் தீவிரத்தைக் கண்டுபிடிக்கலாம். தீவிரமான பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். கதிர்வீச்சு பாதிப்புக்குளாகும் ஆபத்தும் இதில் இருக்கிறது