கேரளா மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபா வைரஸ் என்பது ஒரு புதிய வகை வைரஸ் தொற்று ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவுகிறது. இதன் விளைவாக உண்டாகும் நிபா வைரஸ் நோய் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. இந்த நோய்க்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை. எனினும், ஆராய்ச்சியாளர்கள் இதற்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.
நிபா வைரஸ் முதலில் கம்புங் சுங்கை நிபா, என்னும் மலேசியா நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நிப்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.மலேசியாவுக்குப் பிறகு, இந்த வைரஸ் பங்களாதேஷிலும் கண்டறியப்பட்டது. தற்போது, இதன் தாக்கம் இந்தியாவிலும் காணப்படுகின்றது. நம் நாட்டில் இந்த வைரஸ் கேரள மாநிலத்தில் அதிகமாக பரவியுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு, மலேசியாவில் முதல் முறையாக நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பன்றிகளில் இருந்து பரவிய நிபா வைரசால் மலேசியாவில் சுமார் 100 பேர் பலியாகினர். இந்தியாவில் முதலில் கடந்த 2001 இல் மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பழம் திண்ணி வௌவால்கள் மூலமே நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 இல் 18 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதில், 17 பேர் உயிரிழந்தனர்.
எவ்வாறு பரவுகிறது ?
நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பன்றிகள் அல்லது மற்ற விலங்குகளிடம் இருந்து இது மனிதர்களுக்குப் பரவும்.
இந்த வைரஸ் முதன்முதலில் மலேசியாவில் கண்டறியப்பட்டது, மலேசியாவில் இந்த நோய் பாதிக்கப்பட்ட பன்றிகளின் மூலம் பரவியது. சிங்கப்பூரில், நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட வெளவால்களின் மூலம் பரவியது.பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில், இந்த நோயின் தாக்கம் உள்ள வெளவால்களால் பாதிக்கப்பட்ட பனை கனத்தை குடித்ததன் விளைவாக நிபா வைரஸ் மனிதர்களிடியே பரவியது. இந்த வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகள், வௌவால்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அறிகுறிகள்:
பொதுவாக ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 5 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அதன் பிறகு அறிகுறிகள் தீவிரமாகும். காய்ச்சல், தலைவலி, மயக்கம் மற்றும் குமட்டல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். சிலருக்கு மூச்சுத் திணறல், வயிற்று வலி, வாந்தி, சோர்வு மற்றும் பார்வை மங்குவது ஆகிவையும் ஏற்படும். சில சமயங்களில் நோயாளிகள் கோமாவுக்கு செல்லவும், மூளைக்காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
சிகிச்சை
நிபா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ரிபாவிரின் (ribavirin) மருந்து நிபா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையில் பயனுள்ளதாக அமைகிறது. எனினும், மனிதர்களுக்கு இந்த மருந்து நிவாரண அளிக்குமென இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பழந்திண்ணி வௌவால்களால் உண்ணும் பழங்களை மனிதர்கள் உண்ணக் கூடாது. அதன் எச்சங்கள் இருந்த பழங்களையும் சாப்பிடக் கூடாது. பனை கன்று சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோல நிபா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் யாரும் தொடர்பு கொண்டு இருக்கக் கூடாது. நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தனியாக உணவு, பாத்திரங்கள், கழிப்பிடம் ஆகியவை தர வேண்டும். அவற்றை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும். கைகளை சோப் அல்லது சானிடைசர் பயன்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.நிபா வைரசுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. கைகளைக் கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.