அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும். மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு.
இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.
அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.