கம்மங்கூழ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 தமிழனின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். 10 வருடங்களுக்கு முன்பு வரை கம்மங்கூழ் அனைவரது வீட்டிலும் சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் தற்போது இந்த கம்மங்கூழ் அரிய பானமாக தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வருகிறது. 


வெயில் காலத்தில் உடல் சூட்டால் நிறைய பேர் கஷ்டப்படுவார்கள். இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு இளநீருக்கு அடுத்தப்படியாக சிறந்த பானம் என்றால் அது கம்மங்கூழ் தான். ஒருவர் கம்மங்கூழை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்படும்.

கம்மங்கூழை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது இரத்த சோகையை சரிசெய்யும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க நினைத்தால், கம்மங்கூழை தினமும் குடித்து வாருங்கள்.

கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவும். இது இரத்தத்தின் அடர்த்தியைத் தடுத்து, இரத்தம் உறைவதைத் தடுத்து, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

கம்மங்கூழில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம், பசியுணர்வைக் குறைத்து, உடல் எடையைப் பராமரிக்க உதவும். மேலும் இது மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.


கம்பு உணவுகளில் அதிக அளவு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. 100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது.வளரும் குழைந்தைகள் கம்பு உணவினை உண்டு வந்தால் அவர்களின் வளர்ச்சியானது மிகவும் சீராக அமையும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடித்தால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுக்கலாம்.