தற்போது இலந்தை பழம் சீசன் என்பதால் இன்றும் கிராமங்களின் வயல்வெளி, ஏரிக்கரை ஓரத்தில் உள்ள இலந்தை மரங்களில் சிறுவர்கள் பழம் பொறுக்கி உண்கின்றனர். அதிக ஊட்டசத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் என்றழைக்கப்படுகிறது.
இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதால் நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இப்பழத்தில் கொட்டைப்பகுதியும் அதை சுற்றி சதைப்பகுதி இருக்கும் இது மிகவும் சுவை மிகுந்தது.
கோடைகாலங்களில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிப்பதால் அனைவருக்குமே உடல் எளிதில் வெப்பமடைந்து அதிக வியர்வை மற்றும் நீர் சத்து இழப்பு ஏற்படுகிறது. இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுத்துவார்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்கிறது.
உடலில் கால்சியம் குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் லேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப்பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்
உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்தநீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு.
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப்பழத்தின் விதையை நீக்கிவிட்டு, பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக் கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அனைவருக்கும் இருக்கிறது என்றாலும் ஒரு சிலருக்கு அதீதமாகவும், ஒரு சிலருக்கு சற்று குறைவாக இருக்கும் நிலை இருக்கிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஞாபக திறன் மிகவும் முக்கியம் எனவே மாணவர்கள் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றில் பல மாசுகள் நிறைந்துள்ளன இது நமது ரத்தத்தில் கலக்கும் போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இலந்தை பழத்திற்கு ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்ததை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனவே. அடிக்கடி இலந்தை பழங்களை சாப்பிடுவதால் ரத்த சுத்தி ஏற்படுகிறது.
தூக்கமின்மை ஒரு மனிதனை மிகவும் அவஸ்தைக்குள்ளாகும் பிரச்சனையாகும். நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். இலந்தை பழம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. இந்த இலந்தை பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தூக்கமின்மை குறைபாடு நீங்கும்.