நறுமணப் பொருள்களில் தனித்துவமானது ஏலக்காய். இனிப்புகள், தேநீர், காபி... எனப் பலவற்றிலும் உபயோகிக்கப்படுகிறது. ஏலக்காயை வெறும் நறுமணம்கூட்டும் பொருள் என்று மட்டும் நாம் வரையறுத்துவிட முடியாது. அதனுள் நிறைய மருத்துவக் குணங்களும் புதைந்துகிடக்கின்றன.
நிறத்தைப் பொறுத்தும், நறுமணம் அளிக்கும் குணத்தைப் பொறுத்தும் ஏலக்காய் இரண்டு வகைப்படும்.
தென்னிந்தியாவில் விளையும் இவ்வகை ஏலக்காய் நன்கு கொழுத்த பச்சை ஓடுகளைப் பெற்றிருக்கும். இதையே மிகச் சிறந்த தரமான வகை எனக் குறிப்பிடலாம். முழுதாகவும் பொடியாகவும் கிடைக்கும் இதன் ஓடு, நீண்ட நாள்களுக்கு வலுவாக இருப்பதால், விதைகளின் மணம் மாறாமல் இருக்கும். இது நறுமணத்துக்காகவும், இனிப்பு வகைகள் செய்வதற்கும் பயன்படும். தேநீர், காபி, கேக் வகைகள், பிரெட் ஆகியவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
பச்சை ஏலக்காயைவிடப் பெரியதாகவும், ஓடுகளில் முடிபோன்ற அமைப்பையும் பெற்றிருக்கும். பார்ப்பதற்கு சிறிய தேங்காயைப்போல் தோற்றமளிக்கும். இதையும் நறுமணத்துக்காக பிரியாணி, கறி, கரம் மசாலா முதலியவற்றில் பயன்படுத்துவர்.
மருத்துவ பயன்களுக்காக, ஏலக்காய், இந்தியாவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சை ஏலக்காயில் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரை பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
ஏலக்காய், செரிமானத்திற்கு பேருதவி புரிவதால், இந்தியர்களின் ஒவ்வொரு சமையலிலும் அது நிச்சயம் இடம்பிடிக்கிறது. வயிற்றில் ஏற்படும் அல்சர், ஆசிட் ரீபிளக்ஸ் மற்றும் வாயு சம்பந்தமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது.
ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களும், பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும் பண்புகளும் உள்ளன. ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், வாய் சுகாதாரம் பேணப்படும். வாய் துர்நாற்றம் மற்றும் கெட்ட சுவாசத்தால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும்.
வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
ஏலக்காய் எண்ணெயில் உள்ள பைட்டோ கெமிக்கல், சினியோல், கெட்ட சுவாசத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் அழிப்பதற்கும், பல் துவாரங்கள் மற்றும் பல் சிதைவைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது.
புகை பழக்கத்தை நிறுத்த விரும்பும் மக்களுக்கு ஏலக்காய் ஒரு இயற்கை சிகிச்சையாக உள்ளது. ஏலக்காயை ஒரு நாளைக்கு 4 முதல் 6 முறை மெல்லுவது நிகோடின், அமைதியின்மை, எரிச்சல், பொறுமையின்மை மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும் இது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துவதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.