தர்பூசணியின் பல்வேறு நன்மைகள்

கோடைகாலங்களில் எப்போதும் உடலில் நீர்சத்து இருப்பதும், உடல் குளிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம். இவற்றை பெற நமக்கு பல இயற்கை உணவுகள் உதவுகின்றன. அதில் ஒன்று தான் “தர்பூசணி” பழம். அதில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன.


தர்பூசணியில் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்தின் அளவு, பசலைக் கீரைக்குச் சமமாகும். வைட்டமின் ஏ, சி, பி1, பி6 மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில்  அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.

உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

கோடைக் காலங்களில் கிடைக்கக்கூடிய இந்தத் தர்பூசணியைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை உள்ளது.


வறண்ட சருமம் உள்ளவர்கள், இரண்டு வாழைப்பழத் துண்டுகளுடன், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது சேர்த்து நன்றாகப் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினர், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை விலகும்.

நரம்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதில் சில இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் சிலருக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது. இது தர்பூசணி பழத்தில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது. எனவே பழத்தை சாப்பிடுவதோடு இந்த வெள்ளை பகுதியை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும்.

நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும். தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. தர்பூசணி பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் எதிர்ப்பாற்றல் வளருகிறது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தர்பூசணி பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை தர்பூசணி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.