முகமது கஜினியின் வரலாறு

 பொதுவாக அயராத முயற்சிக்கு கஜனி முகம்மதுவின் படையெடுப்பை உதாரணமாகச் சொல்வர். ஆனால் தோல்வியால் தளராத முயற்சிக்கு இது சரியான எடுத்துக்காட்டில்லை. ஆம், கஜினி படையெடுத்து வந்த 17 முறையுமே அவர் வெற்றியடைந்தார். ஒவ்வொரு முறையும் பெருஞ்செல்வத்தோடே தன் நாட்டிற்குத் திரும்பினார்.



முகமது கஜினி கிபி 971 ஆம் ஆண்டு கஜினியை ஆண்ட சுபுக்தகினுக்கு மூத்த மகனாக பிறந்தார்.சுபுக்தகின் இந்தியா மீது போர் தொடுத்த போது ராஜா ஜெய்பால் அவரை எதிர்த்து போர் புரிந்தார். முகமது கஜினி அப்போது தன் தந்தைக்காக போரில் ஈடுபட்டார். ஆனால் அந்த போரில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.


முகமது கஜினி சுபுக்தகினின் மூத்த மகனாக இருந்தாலும் அவருக்கு முகமதுவை மன்னராக்குவதில் விருப்பமில்லை. ஏனெனில் அவரின் இறுதிகால செயல்களால் அவர் அதிருப்தியில் இருந்தார். அதனால் அவரின் இளைய மகனான இஸ்மாயில் அரசனாக முடிசூடினார். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. முகமது தனது தம்பியை வீழ்த்திவிட்டு அரியணை ஏறினார். தன்னுடைய 27 வது வயதில் சுல்தானாக தன்னை அறிவித்து கொண்டார்.


இந்தியா மீது படையெடுக்க காரணம் ஒன்று அதன் அளவில்லாத செல்வம் மற்றொன்று முகமது தனது தலைநகரை கஜினியில் இருந்து இந்தியாவிற்கு மாற்றி ஒட்டுமொத்த ஆசியாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர எண்ணினார். கிபி 1000 முதல் 1027 வரை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா மீது போர் தொடுத்து கொண்டே இருந்தார்.


கிபி 1001 ல் முகமது கஜினி தன் பழைய எதிரியான ஜெய்பால் மீது போர் தொடுத்தார். மன்னர் ஜெய்பால் மிகவும் வீரத்துடன் போரிட்டு முகமது கஜினியை தடுத்தார். ஆனால் இறுதியில் தோல்வியை தழுவினார். கிட்டத்தட்ட 15,000 வீரர்கள் இந்த போரில் கொல்லப்பட்டனர். ஜெய்பால் முகமதுவால் சிறைபிடிக்கப்பட்டார், அவரும் அவரின் 15 உறவினர்களும் முகமது கஜினி முன் நிறுத்தப்பட்டனர்.



முகமது கஜினி ஜெய்பாலின் அனைத்து செல்வங்களையும் அபகரித்து கொண்டார். மேலும் அவரை விடுவிக்க 2,50,000 தினார் பணமும், 5,00,000 இந்தியர்கள் அடிமையாகவும் வேண்டுமென்று நிபந்தனை விதித்தார். இறுதியில் அவை கொடுக்கப்பட்டு ஜெய்பால் அவரது மகன் அனந்தபாலால் மீட்கப்பட்டார். ஆனால் தோல்வியடைந்ததால் ஜெய்பால் தனது உயிரை எரியும் நெருப்பில் விழுந்து மாய்த்து கொண்டார்.


1008 ஆம் ஆண்டு முகமது கஜினி மீண்டும் போர் தொடுத்தார். அனந்தபால் மற்ற அரசர்களை உதவிக்கு வரும்படி கூறினார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க உஜ்ஜயினி, குவாலியர், டெல்லி, அஜ்மீர் நாட்டு மன்னர்கள் அனந்தபாலுக்கு உதவினர்.முகமதுவின் படையில் கிட்டதட்ட 6000 வில் வீரர்கள் இருந்தனர். கோகர்கள் அதில் 5,000 பேரை கொன்றனர். போரில் அனந்தபாலின் கைதான் ஓங்கியிருந்தது, ஆனால் எதிர்பாராதவிதமாக அனந்தபாலின் யானைக்கு மதம் பிடித்து அது அவரை போர்க்களத்தை விட்டு வெளியே இழுத்து சென்றது. தலைமை இல்லாத இந்திய படையில் குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பின்வாங்க தொடங்கினர். அதன்பின் முகமதுவின் கை ஓங்கி இந்திய படையின் 20,000 வீரர்கள் கொல்லப்பட்டனர்.


கிபி 1009 ஆம் ஆண்டு நாகர்கோட் முகமது கஜினியால் தாக்கப்பட்டது. அங்கிருந்து விலைமதிப்பில்லாத தங்கம், வைரம் மற்றும் செல்வத்தை தன் தலைநகருக்கு அள்ளி சென்றார் முகமது கஜினி. அதற்கு பின் தானெசீர், கண்ணுஜ் என பல இடங்களிலும் முகமது தனது படையெடுப்பை நடத்தினார்.


1025 ல் சோமநாத கோவில் தாக்கப்பட்டது, ராஜபுத்திர அரசர்களும் மற்ற அரசர்களும் கோவிலை பாதுகாக்க வீரத்துடன் முன்வந்தனர். முகமதுவின் படைக்கும் இந்தியர்களின் படைக்கும் 3 நாட்கள் போர் நடைபெற்றது. இருதியில் முகமது கஜினியின் படை வெற்றி பெற்று 20 இலட்சம் தினார் மதிப்புள்ள செல்வத்தை கொள்ளையடித்து சென்றது.


முகமது கஜினியின் மற்றொரு பலமாக இருந்தது நம் மன்னர்களிடையே இருந்த ஒற்றுமையின்மைதான். இறுதியாக 1030, ஏப்ரல் 20 ஆம் தேதி தன் 59 வது வயதில் முகமது கஜினி இறந்தார்.