பெட்ரோலின் வரலாறு

இன்றைய நவீன பெட்ரோலின் ஆரம்பகால வரலாறு என்பது ஒரு நூற்றாண்டு கடந்தது அல்ல; சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக்கொண்டது. பண்டையகால ஏழு அதிசயங்களில் ஒன்றான 'பாபிலோன் தொங்கும் தோட்டம்' அமைந்திருந்த பாபிலோனில் (Babylon) கண்டுபிடிக்கப்பட்டதுதான் பெட்ரோல். இன்றைய இராக் என்று சொல்லப்படும் பாபிலோனின், யூப்ரடீஸ் (Euphrates) நதிக்கரை அருகே, பாபிலோனியர்கள் மிகப்பெரிய கோட்டை ஒன்றைக் கட்டத் திட்டமிட்டிருந்தனர். விண்நோக்கிய பெரிய கட்டடம் என்பதால், அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் பூமியை நோக்கி நீண்டது. ஆற்றின் கரை என்பதால் உள்ளுர நீர்கூட ஊறலாம். ஆனால், அந்த மண்ணில் ஊறியதோ இதுவரையில் கண்டிராத ஒரு கறுப்பு திரவம். ஆனால், அது செல்வத்தை வாரி இறைக்கும் `கறுப்புத் தங்கம்’ என்பதை அப்போதைய பாபிலோனிய மக்கள் உணர்ந்திருக்கவில்லை. விளைவு, கிடைத்த அந்த கறுப்பு திரவ (Asphalt or Bitumen) கச்சா எண்ணெயைக் கட்டுமானத்துக்கு சிமென்ட் பசைபோலவும், கரையான் அரிக்காமல் தடுக்க மரத்தூண்களில் தடவியும் பயன்படுத்திவந்தனர். பின்னர் அதைக் காய்ச்சியும், வற்றவைத்து உருக்கியும் சிறிது சிறிதாக பயன்பாட்டைப் பெருக்கி கப்பல் கட்டுமானம் மற்றும் அதன் ஓட்டைகளை அடைக்கவும் பயன்படுத்தினார்கள் பாபிலோனியர்கள்.


நாளடைவில், இதன் எரியும் தன்மையை அறிந்துகொண்ட பாபிலோனிய மக்கள், தங்கள் வீடுகளுக்கும், வீதிகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும் தீப்பந்தத்துக்கு எண்ணெயாக மாற்றினர்.மண்ணுக்குள் தவழ்ந்துகிடந்த பெட்ரோலின் மூதாதையர்களை, தன் கைகளில் வாரி எடுத்துக்கொண்டான் மனிதன். ஆம், அவர்கள் கண்டுபிடித்தது பெட்ரோலின் மூலப்பொருளான கச்சா எண்ணெயை! அதன் பின்னர்தான் இந்த கச்சா எண்ணெயை மூலமாக வைத்து, தார் (Tar), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), பெட்ரோல் (Petrol) எனப் பல சந்ததிகளை அதாவது, பல்வேறு உப பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கினான் மனிதன். 



கி.பி. 347-ம் ஆண்டு முதன்முதலில் நவீன முறையில் கச்சா எண்ணெய் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள் சீனர்கள். அதாவது, மூங்கில் கம்புகளைத் துளையிட்டு, அதை பூமிக்கடியில் குழாய்களைப்போல பயன்படுத்தி கச்சா எண்ணெயை வெளிக்கொண்டுவந்தனர். கிட்டத்தட்ட 800 அடி ஆழமுள்ள அந்த எண்ணெய்க் கிணறுதான் பண்டைய காலத்தின் முதல் எண்ணெய்க் கிணறாக இருந்திருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். 


கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், பாபிலோனியர்கள் தங்கள் தலைநகரான பாக்தாத் (Baghdad) முழுவதும், கச்சா எண்ணெயை உருமாற்றி போக்குவரத்துக்கான சாலைகள் அமைத்தனர்.


கி.பி. பத்தாம் நூற்றாண்டில் அஸர்பைஜான் நாட்டின் பாகு (Baku, Azerbaijan) பகுதியில் எங்கும் இல்லாத வகையில் மிக அதிக அளவிலான எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


பன்னிரண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும், பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கி.பி. 1745-ல் ரஷ்யாவின் உக்தாவிலும் (Ukhta), பிரான்ஸின் அல்சேவிலும் (Alsace) என அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. 


1859-ம் ஆண்டு, எட்வின் டிரேக் (Edwin Drake) என்பவர், அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா (Pennsylvania) பகுதியில் பூமியைத் தோண்டாமல், கச்சா எண்ணெய் எடுக்கும் நவீன முறையைக் கண்டுபிடித்தார். இவரால் தோண்டப்பட்ட கச்சா எண்ணெய்க் கிணறுதான், உலகின் முதல் நவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகக் கருதப்படுகிறது.


இப்படியாக கச்சா எண்ணெயிலிருந்து தோற்றம் பெற்ற பெட்ரோலியப் பொருள்கள், 20-ம் நூற்றாண்டிலிருந்து தற்போது வரை உலக வணிகம் மற்றும் உலக அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகின்றன. 


டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்து தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல். 

பிரான்ஸில் (1858) பிறந்தவர். இவரது அப்பா புத்தக பைண்டிங், தோல் பொருள் உற்பத்தி தொழில்கள் செய்தவர். பெற்றோர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்பதால், பிரெஞ்ச் - பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் குடியேறினர்.

படிப்பைத் தொடர்வதற்காக சிறுவன் டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். இயந்திரங்களுடன் அதிக நேரம் செலவிடுவதில் அவனுக்கு கொள்ளை ஆசை. படிப்பிலும் கெட்டிக்காரன்.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனிக்குச் சென்றவர், ஆக்ஸ்பர்கில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற்கல்விக் கூடத்தில் சேர்ந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.


உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. அந்த நேரத்தில், சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார்.

முனீச்சில் தனது பேராசிரியர் கார்ல் வான் லிண்டேவின் குளிர்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்தார். நவீன முறையில் குளிர்சாதனப் பெட்டியை வடிவமைக்க உதவினார். அடுத்த ஆண்டே இந்நிறுவனத்தின் இயக்குநரானார். இருவரும் இணைந்து பல இயந்திரங்களை வடிவமைத்தனர்.
நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். கார்னாட் சுழற்சி அடிப்படையிலான இன்ஜினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார்.

இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார்.

பல நாடுகளிலும் டீசல் இன்ஜினுக்கு காப்புரிமை பெற்றார்.பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கப்பட்டு டீசல் இன்ஜினுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கும் ‘டீசல்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு, தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 வயதில் மறைந்தார்.