தற்காப்பு கலையை உலகிற்கு திரையின் மூலம் அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ.1940 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்ட பாடகருக்கும், ஜெர்மன் வம்சாவளி தாய்க்கும், அமெரிக்காவில் பிறந்தவர்தான் இந்தப் புரூஸ் லீ.
கத்தி, சைக்கிள் செயின் சகிதம் வளையவந்த லீ, ஒருசமயம் லோக்கல் கவுன்சிலரின் மகனை பெண்டு நிமிர்த்திவிட்டார். தொடர்ச்சியாக நிறைய வம்புகளில் மாட்டிவந்த லீயை அமெரிக்கா அனுப்பிவிட பெற்றோர் முடிவு செய்தனர். அவர்மீதான சில சில்லறை வழக்குகளுக்காக போலீசாருக்கு 'கப்பம்' கட்டி வெற்றிகரமாக விசாவை சேஸ் செய்தனர்.
கராத்தே வகுப்புக்குச் சென்ற அதேநேரத்தில், 'காதலியை கரெக்ட் பண்ண உதவும்’ என்ற ஒரே காரணத்துக்காக புரூஸ் லி 'சா சா' நடனமும் கற்றிருக்கிறார். 18- வயதில் அவர் ஹாங்காங்கின் 'சா சா' சாம்பியன். அமெரிக்காவுக்கு வண்டி கட்டியபோது அவரிடம் இருந்தது 100 டாலர்கள் மட்டுமே. உடன் பயணித்த பயணிகள் சிலருக்கு சா சா நடன உத்திகளை சொல்லிக்கொடுத்து ஃப்ளைட் தரைதொடும் முன்னே சில எக்ஸ்ட்ரா டாலர்களை சம்பாதித்தார்.
லீயை வேலைத்தேடச்சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். லீ பார்த்த வேலை என்ன தெரியுமா? அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள், நடிகர்கள் என பலருக்கும் குங்ஃபூவை சொல்லிக் கொடுத்தார். 'உத்யோகம் புருஷ லட்சணம்' என்பது 'உதையோகம் புரூஸ் லீ லட்சணமா'கிற அளவுக்கு பிரபலமானார்.
சிறு வயதிலேயே சீன தற்காப்பு கலைகளை கற்று கொண்டார். மேற்கத்திய குத்துசண்டையையும் பாரம்பரிய குங் ஃபூவையும் கற்று தேர்ந்த புருஸ்-லீ, இரு கலைகளையும் இணைத்து புதுவிதமான ஒரு கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். தந்தையே ஒரு நாடக நடிகர் என்பதால் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு திரை வாய்ப்பு கிடைத்து.
கோல்டன் கேட் கேர்ல் என்ற திரைப்படத்தில் குழந்தையாகவே புரூஸ் லீ காட்டப்பட்டிருப்பார். குழந்தை நட்சத்திரமாகவும் சிறுவனாகவும் ஏராளமான படங்களில் தோன்றியிருக்கிறார். 1964-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் லாங் பீச் பகுதியில் அவர் நிகழ்த்திய சாகசங்கள், அவரை ஹாலிவுட் நோக்கி அழைத்துச் சென்றன. ஐந்து அடி 8 அங்குல உயரம் கொண்டிருந்த புரூஸ் லீயின் உடல் திறன் வியக்கத் தக்கது. கைகள் இயங்கும் வேகம், வலிமை போன்றவற்றில் புரூஸ் லீக்கு நிகராக சமகாலத்தில் வேறு யாரும் இல்லை என்று தற்காப்புக் கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தீவிரமான பயிற்களின் மூலமாக தசையை வலிமையாக்குவது, உடலை மிக எளிதாக வளைப்பது, நெருக்கடியான தருணத்திலும் இதயத் துடிப்பைச் சீராக வைத்திருப்பது என பல வகையான திறன்களையும் பெற்றவர் புருஸ் லீ. 1964-ஆம் ஆண்டு Long Beach International Karate Championship போட்டியின் போது புரூஸ் லீ நிகழ்த்திய சாகசங்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தன. ஆள்காட்டி விரலை மட்டும் தரையில் ஊன்றியபடி, புஷ் அப்ஸ் பயிற்சியை அவர் மேற்கொண்டபோது பார்வையாளர்கள் அனைவரும் அதனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். One Inch Punch போன்ற மாறுபட்ட நுணுக்கங்களை லீ அறிமுகப்படுத்தியதும் இந்த நிகழ்வின்போதுதான்.
புரூஸ் லி இறந்தபோது 'கேம் ஆஃப் டெத்' என்ற படம் நிறைவடையாமல் இருந்தது. லீயின் பழைய படங்களில் இருந்து சில காட்சிகள், நிறைய டூப்கள் என ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து வெளியிட்டபோது வாங்கிக்கட்டிக்கொண்டது தயாரிப்பாளர் தரப்பு.32 வயதில் புகழின் உச்சியில் இருந்த ஒரு கலைஞன் இறந்து போனதை அவரது ரசிகர்களால் மட்டுமல்ல, உலகத்தின் பலராலும் நம்ப முடியவில்லை. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் மூளை வீக்கத்தால் லீ இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. எனினும் இன்று வரை அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அவர் மறைந்துவிட்டார், அவர் பதித்த தடம் இன்னும் மறையவில்லை.