காபி உருவான வரலாறு

பெரும்பாலும் நம் அனைவரின் காலையும் காபியுடன் தான் விடிகிறது.சிலர் காபிக் குடிப்பது நல்லது என்பார்கள், சிலர் காபிக் குடிப்பது கேடு என்பார்கள், அதெல்லாம் அவரவர் பாடு. காபியில் பல வகைகள், சுவைகள் இருக்கின்றன.


கால்டி என்றப்பெயருடைய ஒரு ஆடு மேய்பவர், எதியோப்பியாவில் ஒன்பதாவது நூற்றாண்டில் அகஸ்மாத்தாக அவர் ஆடுகள் இந்தக் காபி செடியின் இலைகளைச் சாப்பிட்டபின் குதித்தோடியதைப்பார்த்து காபி பாணத்தை கண்டுபிடித்ததாக ஒரு கதை உண்டு . இவர் காப்பிக்கொட்டைகளை கடித்துப்பார்த்து கொஞ்சம் உற்சாகம் ஏற்படுவதை கவனித்து , அங்கே உள்ள துறவியிடம் எடுத்துச்சென்றாராம். துறவி அவற்றை நெருப்பில் போட அப்போது அங்கே எழுந்த மணத்தில் அனைவரும் மயங்கி, வருத்துக்கிடந்த கொட்டைகளை நெருப்பு அணைவதற்குத் தண்ணீரில் போட , காபி பானம் உருவானதாம். ஆனால் இது வெறும் கட்டுக்கதை.

உண்மையான கண்டுபிடிப்பு ஷேக் அபுல் ஹாசனின் சீடர் ஒமார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அப்த அல் கதிர் என்பவர் எழுதிவைத்துள்ள குறிப்புகள் மூலம் சொல்லப்படுகிறது.

வழிபாட்டில் கடவுள் பெயரைச்சொல்லும்போது உற்சாகம் ஏற்படுத்தும் பானமாக முதலில் உபயோகித்தார்கள். சூஃபிக்கள் இரவு கடவுள் வழிபாட்டின்போது தூக்கம் வராமல் இருப்பதற்குக் காபி குடித்தார்கள். மெதுவாக இந்தப் பானம் 1414 ல் மெக்காவிற்கும் , 1500 ல் எகிப்த் நாட்டிற்கும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஊடுருவத் தொடங்கியது.

மெக்காவில் கிபி 1511 இந்தப் பானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சொல்லப்பட்ட காரணம் அதன் உற்சாகப்படுத்தும் தன்மை. அதேபோல் 1532 வில் எகிப்திய மன்னரும் காபிக்கு தடை விதித்தார். இந்தக் கால கட்டத்தில் காபி பானம் மெதுவாக இத்தாலி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தலை காட்டத்தொடங்கியது. எதியோப்பியாவின் தேவாலயங்களும் காபியை ஒரு முஸ்லீம் பானம் என்று கருதி அதைத்தடை செய்தன.பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசியில்தான் பல தேசங்களில் காபி மீதான தடைகள் நீங்கத்தொடங்கின. 

காபி எனும் பானம் கண்டுபிடிக்கப்பட்டு 11 நூற்றாண்டுகள் ஆகிறது.பொதுவாக காபி மரங்கள் 30 அடி வரை வளர முடியுமாம். ஆனால், 10 அடியில் இருக்கும் போதே அறுவடை செய்துவிடுங்கின்றனர். அப்போது தான் எளிதாக பறிக்க முடியும்.


பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் தான் காபி அதிகமாக பருகப்படுகிறது.கேமரூனில் இருக்கும் ஒரு வகை காபி (Coffea Charrieriana) தான் உலகிலேயே இயற்கையாக காஃபைன் நீக்கப்பட்ட காபி ஆகும்.சில நாடுகளின், சில பகுதிகளில் காபிக் கொட்டைகளை உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.

நியூயார்க் மக்கள் சராசரியாக ஒரு நாளுக்கு ஏழு முறையாவது காபியைப் பருகுகிறார்கள்.உலகில் எண்ணெய்க்கு அடுத்து இரண்டாவதாக, அதிகமாய் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் காபி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் காபி தொழிற்சாலைகளில் மட்டுமே இரண்டரைக் கோடி பேர் வேலை செய்கின்றனர்.

ஒருவருடத்திற்கு 40 பில்லியன் டாலர்களை காபிக் குடிப்பதற்கு செலவு செய்கின்றனர் அமெரிக்கர்கள். உலகின் மற்ற பகுதியினர் வெறும் 1.6பில்லியன் டாலர்கள் தான் செலவழிக்கின்றனர்.