ராயல் என்ஃபீல்டூ பற்றிய கதை

 ஆண்கள் அனைவரும் தங்களை கெத்தாக வெளிக்காட்டிக்கொள்ள விரும்பும் வாகனமாகக் கருதப்படுவது என்ஃபீல்டு ரக புல்லட்டுகள்தான். இந்திய வாடிக்கையாளர்கள் மனதில், ராயல் என்ஃபீல்டு புல்லட்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மக்களின் மனதுக்கு ஏற்றபடி அடிக்கடி தன்னை ராயலாக மாற்றிக்கொண்டு புதுவித என்ட்ரியையும் கொடுத்துவருகிறது.

ராயல் என்ஃபீல்டின் தலைமையகம் சென்னைதான் என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த வண்டி பிறந்தது என்னவோ இங்கிலாந்தில்தான். இங்கிலாந்தில் உள்ள ரெட்டிட்ச், வொர்செஸ்டர்ஷைர் பகுதியில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது என்ஃபீல்டு நிறுவனம். Enfield Manufacturing Co. ltd. என்ற பெயரில் இந்த நிறுவனம் இயங்கிக்கொண்டிருந்தது.


1893 - 1900 ஆண்டு வரை சைக்கிள், குவாட்ரி சைக்கிள், ட்ரை சைக்கிள் மற்றும் புல் வெட்டும் இயந்திரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அப்போதெல்லாம் ராயல் என்ஃபீல்டு என்றால் `பைக்' என்று சொல்ல மாட்டார்கள். முதன்முதலாக 1901-ம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு தனது முதல் மோட்டார்சைக்கிளை தயாரிக்கிறது. அது 2.5bhp பவர் தரும் இன்ஜினைக் கொண்டிருந்தது. அதன் பிறகு, 1916-ம் ஆண்டில் முதல் உலகப்போரில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டன.பிறகு, துப்பாக்கிப் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளை என்ஃபீல்டு அறிமுகம்செய்தது. அதன் பிறகு, 1931-ம் ஆண்டில்தான் புல்லட் அறிமுகமானது. அப்போதும் புல்லட் என்பது வெறும் சைக்கிள்தான். 1932-ம் ஆண்டில் முதன்முதலாக புல்லட் `பைக்' என்ற வடிவில் கம்பீரமாக அறிமுகமானது.


இரண்டாம் உலகப்போரில் ஏர்ஃபோர்ஸ் வீரர்களுக்காக `FLYING FLEA' என்ற பைக் அறிமுகப்படுத்தினார்கள். 1952-ம் ஆண்டில் இங்கிலாந்தில் பைக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அப்போது, மெட்ராஸ் மோட்டார் நிறுவனமும் என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனமும் இணைந்து பைக்கை இந்தியாவில் தயாரிக்க  ஒப்பந்தம் போட்டார்கள். இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் ராணுவத் துறையின் பாதுகாப்புப் பணிக்காக 800, 350சிசி வகை புல்லட்டை தேர்வுசெய்கிறார்கள். அப்போதுதான், ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் தன்னுடைய பயணத்தை ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு முறையும் புதிய புதிய வடிவில் வலம்வந்த என்ஃபீல்டு, 2009-ம் ஆண்டில் க்ளாசிக் 500 மற்றும் க்ளாசிக் 350 என்ற மாடல் இந்தியாவில் வெளியாகி மக்களைத் தன்வசப்படுத்தியது. மக்களின் விருப்பத்துக்கேற்ப மாடல்கள் வந்ததால் விற்பனையும் வளர்ச்சியடைந்தது.

தொடர்ந்து 2016-ம் ஆண்டில் அட்வெஞ்சர் ரக ஹிமாலயன் பைக் வெளிவந்தது. பயணம் செய்வதற்கு பல்வேறு வாகனங்கள் இருந்தாலும், தொலைதூரப் பயணங்களுக்குச் செல்லும் பலரும் ராயல் என்ஃபீல்டையே விரும்பினர் 2017-ம் ஆண்டில் முதன்முறையாக 650cc ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட கான்டினென்ட்டில் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் மாடல் அறிமுகமானது. இதையடுத்து, இந்த ஆண்டு 2018-ல் கலிஃபோர்னியாவில் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள் விற்பனைக்கு வந்தன.