அரிஸ்டாடிலின் வாழ்க்கை வரலாறு

 அரிஸ்டாட்டில் இவர் பண்டைய உலகின் தத்துவஞானி, விஞ்ஞானி மற்றும் பல்துறை வல்லுநர் ஆவார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்  170 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் அவர் காலத்தில் அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தன. வானவியல், விலங்கியல், கருவியல், புவியியல், இயற்பியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டைய கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் எழுதியிருந்தார். அத்துடன் கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், இறையியல், ஒழுக்கவியல் ஆகியவையும் இவரின் எழுத்துகளில் இடம் பெற்றிருந்தன. 


உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியானது கிரேக்க தத்துவம் அதனை முதலில் உலகுக்கு தந்தவர் சாக்ரடீஸ். அவரை தொடர்ந்து இருவர் தத்துவ உலகிற்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்.  ஒருவர் சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டோ, மற்றவர் பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாடில். இந்த மூவரையும்தான் கிரேக்க தத்துவ உலகின் மும்மூர்த்திகள் என்று வருணிக்கிறது வரலாறு. தத்துவ மேதை அரிஸ்டாடிலைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கி.மு 384-ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்டஹிரா என்ற நகரில் பிறந்தவர் அரிஸ்டாடில் அவரது தந்தையும் நன்கு தேர்ந்த மருத்துவருமான நிக்கோ மாக்கஸ் மாஸிடோனியாவின் மன்னன் பிலிப்ஸ்க்கு அரச மருத்துவராக செயல்பட்டவர். அந்த தொடர்பு அரிஸ்டாடிலின் வாழ்க்கையில் பெரும் பங்காற்றியது. தனது தந்தையிடமிருந்து உயிரியல் சம்பந்தபட்ட விசயங்களை கற்றுகொண்ட அரிஸ்டாடில் தனது 17-ஆவது வயதில் பிளேட்டோ அகாடமியில் சேர்ந்தார்.

சுமார் 20 ஆண்டுகள் பிளேட்டோவிடம் பாடம் கற்ற அரிஸ்டாடில் குருவை மிஞ்சும் மாணவனாக இருந்தார். அவரது அறிவுக்கூர்மையை பார்த்து வியந்த பிளேட்டோ அரிஸ்டாடிலை தனது பள்ளியின் அறிவுகளஞ்சியம் என்று போற்றி மகிழ்ந்தார். அரிஸ்டாடிலின் அறிவுத்திறனை அறிந்த மாஸ்டோனியா மன்னன் பிலிப்ஸ் தனது மகனுக்கு ஆசிரியராக வரும்படி அழைப்பு விடுத்தார். அந்த மகன் வேறு யாருமல்ல.. கைப்பற்றுவதற்கு இனி தேசங்களே இல்லையே என கலங்கினான் என வரலாறு வருணிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டர்தான்.


அலெக்ஸாண்டரும் வேறு சில முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகளும் அரிஸ்டாடிலிடம் வாழ்க்கைப்பாடங்களை கற்றுகொண்டனர். மாவீரன் அலெக்ஸாண்டர் ஒவ்வொரு தேசமாக கைப்பற்றியபோது அவற்றின் மன்னர்களையும் வீரர்களையும் நல்முறையில் நடத்தியதற்கு அரிஸ்டாடிலின் போதனைகள் முக்கிய காரணமாகும். 

கி.மு. 335 அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் திரும்பினார், அங்கு லைசியம் என தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிஸ்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பள்ளியில் படிப்புகளை நடத்.திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்ஸ் நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிஸ்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர்.

ஏதென்ஸில் அரிஸ்டாடில் இருந்த போது, அவரது மனைவி பிதியாஸ் இறந்தார். அரிஸ்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்ஸில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.

அலெக்சாண்டர் தன் ஆசிரியரின் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கினார். ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் நிகழ்ச்சி ஆகும். ஆனால், அலெக்சாண்டருடன் அரிஸ்டாட்டிலும் கொண்டிருந்த தொடர்புகள் சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாண்டரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிஸ்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசு துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிஸ்டாட்டிலின் மருமகனை அலெக்சாண்டர் தூக்கிலிட்டார். அரிஸ்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாண்டர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாண்டருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்ஸ் மக்களும் அவரை நம்பவில்லை.அதன் பின் அவர்கள் பிரிந்தனர்.

அலெக்ஸாண்டர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால்  உடல்நலகுறைவில் அரிஸ்டாடில் இறந்தார். அரிஸ்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிஸ்டாட்டில்.