சாக்ரடீஸின் வாழ்க்கை வரலாறு

 

மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். 

 


சாக்ரடீஸ் தனது போதனைகள் எதையும் எழுதி வைக்கவில்லை, ஆனால் இவர் கல்வி மையம் ஒன்றை ஏதென்ஸ் நகரில் உறுவாக்கி தன் மாணவர்களுடன் தர்க்க அடிப்படையில், கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு விளக்கம் செய்தவற்றை இவருடைய மாணவர்கள் (ஜெனோபன் (Xenophon) மற்றும் பிளேட்டோ (Plato) போன்றவர்கள்) எழுதியவைகள் மூலம் அவரது வாழ்க்கை மற்றும் சிந்தனை பற்றிய  தகவல்களின் ஆதாரங்களாக கிடைக்கின்றன. இந்த ஆதாரங்களின் சில  முரண்பாடான தன்மை சாக்ரடிக் புதிர் அல்லது சாக்ரடிக் கேள்வி என அழைக்கப்படுகிறது.

சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்து கொள்வதே சாக்ரடீஸின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சாக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். 

சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

 இதற்கு நீதி மன்றத்தில் பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை இந்த வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் கொண்டுள்ளனர். 

நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன் எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ். 


சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.

அப்போது ஏதென்ஸில் விழாக்காலமாக இருந்ததால் அவரது மரணம் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டது. கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டார். சாக்ரடீஸின் ஆதரவாளர்கள் சிறையில் உள்ள சிறைகாவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து  தப்பி செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால்  சாக்ரடீஸ் உண்மையான மெய்யியலை போதித்ததால்  தவறு செய்ய, தப்பி செல்ல மறுத்து விட்டார்.

பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.

“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு, சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார். விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் காலில் கிள்ளி உணர்வு தெரிகிறதா? என சாக்ரடீஸிடம் கேட்க, அவர் “இல்லை” என கூறிய பின் உணர்வற்ற நிலை சிறிது சிறிதாக உடல் முழுவதும் பரவி அவரது உயிர் அவரின் உடலை விட்டு பிரிந்தது. சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ். சாக்ரடீஸின்மீது பழி சுமத்தியவர்களில் சிலர் பிறகு குற்ற உணர்வால் தூக்கிலிட்டு கொன்றதாக வரலாறு கூறுகிறது.