`காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே', இது சித்தர்கள் வாக்கு. `கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்', `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்' போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
கடுக்காய் நீள் வட்ட வடிவிலோ அல்லது நீண்டோ காணப்படும். கடுக்காயில் மொத்தமாக ஏழு வகைகள் உள்ளன. இதன் தன்மைகளைப் பொறுத்து, கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன.
கடுக்காய், நிலவேம்பு, சுக்கு, சீந்தில் கொடி, வேப்பம் வகைக்கு 10 கிராம் எடை எடுத்து அம்மியில் வைத்து ஒரு இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட கொடுத்து வந்தால் விஷக்காய்ச்சல் குணமாகும்.
கடுக்காயை உடைத்து அதன் தோலை இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு ஓயாத விக்கல் ஏற்படும் சமயம் ஒரு சிட்டிகையளவு தூளை அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழப்பிக் கொடுத்தால், விக்கல் நிற்கும்.
கடுகாய் தூள் பல்வேறு தோல் நோய்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.கடுக்காய் பொடி முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க செய்கிறது.இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் முகத்தை இளமையாக காட்டுகிறது.சருமத்தை கறைபடாமல் வைத்திருக்கிறது.இது ஒரு அற்புதமான இரத்த சுத்திகரிப்பு.முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகளால் நாம் பாதிக்கப்படும்போது பெரிதும் உதவுகிறது.
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை டீஸ்பூன் பொடியைத் வாயில் போட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும். அதேபோல் கடுக்காய் தோலை லேசாக வறுத்தெடுத்து, கற்கண்டுடன் சேர்த்து லேகியம் போல செய்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக சாப்பிட்டு வந்தாலும் வாத நோய் தீரும்.
மூன்று கடுக்காய்களைத் தோல் எடுத்து, தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து இவற்றை ஒன்றாக நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரணசக்தி கூடும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
கடுக்காயின் தோலில் ” டேனின்” என்ற ரசாயனப் பொருள் இருக்கிறது. இது விலங்குகளின் தோல்களைப் பதப்படுத்துவதற்கும் , துணிகளுக்கான சாயம் தயாரிப்பது, நிலக்கரியில் உள்ள அழுக்குகளை நீக்கி, சுத்தம் செய்ய இதனைப் பயன்படுத்திகிறார்கள். தோலை அரைத்த பின் இருக்கும் சக்கை கூட காகிதம் மற்றும் பசை ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்கள் கட்டும் பொழுது, சுவர்கள் வலிமையாக இருக்க மணல், சிமெண்ட் கலவையுடன் சேர்த்து இதன் சாறைப் பயன்படுத்துவார்கள்.