உலகின் மிகப் பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம் என்று சொன்னதும் நம் கண்முன்னே விரிவது அடர்ந்து விரிந்த மணல்திட்டுகளும், சுட்டெரிக்கும் வெயிலும்தான். ஆனால் அதே சஹாரா பாலைவனம் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பச்சை பசேலென பசுமையாக இருந்தது என்று யாரவது நம்மிடம் சொன்னால் “சும்மா கதை விடாதீங்க” என்று சொல்லத் தோன்றும். ஆனால் சுற்றுச்சூழல் தொல்லியல் ஆய்வாளரான டேவிட் ரைட்டின் ஆய்வு முடிவுகள் இதைத் தான் கூறுகின்றன.
சஹாரா பாலைவனம், 9.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.ஆப்பிரிக்கக் கண்டத்தில் 31 சதவீத நிலப்பரப்பை சஹாரா பாலைவனம் கொண்டுள்ளது.இன்னும் 15 ஆயிரம் ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் பசுமைப் பகுதியாக மாறும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.வெப்பம் மிகுந்த பகுதியாக இருந்தாலும், சஹாரா பாலைவனத்தில் சுமார் 20 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.சஹாரா பாலைவனத்தில் உள்ள அல் அசிசியா (லிபியாவில் உள்ளது) நகரம்தான் உலகிலேயே அதிக வெப்பமான (136.4 டிகிரி பாரன்ஹீட்) நகரம்.
சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது நைல் நதிக்கரையிலிருந்து ஒரு கூட்டம் நாடோடிகளாக நகரத் தொடங்கியிருந்தது. அந்தக் கூட்டம் வெறும் மனித இனமாக மட்டுமல்லாமல் ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளையும் கொண்டிருந்தது. இந்த ஆடுகளும் மாடுகளும் நிலத்தில் மேய்ந்தும், நிலத்தை உழுதும், அதனைப் பயன்படுத்தியும் வந்ததன் மூலம் அந்த இடங்களின் தட்பவெப்பத்தை எல்லாம் தீர்மானிக்கும் செயலிகளாக இருந்திருக்கின்றன.
அதீத மேய்ச்சல் தான் பாலைவனமாக மாறியதற்கு முழு முக்கிய காரணம் என்கிறார் ரைட். நாம் வெயிலில் செல்லும் போது கருமை நிற ஆடைகளைத் தவிர்த்து வெண்மை ஆடைகளை அணிவதன் நோக்கம் மெல்லிய நிற ஆடைகள் அதிகம் ஒளியை எதிரொளிக்கும் இயல்புடையவை என்பதால்தான். பொதுவாகவே மெல்லிய நிறங்கள் ஒளியை உள்வாங்காமல் எதிரொலிக்கும் இயல்புடையவை. கால்நடைகளால் அதிகமாக மேய்ச்சலுக்கு உட்பட்ட இந்த நிலங்களும் சூரிய ஒளியை உள்வாங்காமல் எதிரொளித்து மீண்டும் வளிமண்டத்துக்கே அனுப்ப வளிமண்டலம் ஒருகட்டத்தில் மிகுந்த வெப்பமாகிப் போனது. வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் பொதுவாக மேகங்கள் உருவாகும் வாய்ப்புகளும் குறைந்து போகும். மேகங்கள் இல்லையெனில் மழையும் இல்லை. இப்படி மழையே இல்லாத சஹாரா நிலம் நாளடைவில் பாலைவனமாக மாறிவிட்டது.
முதலில் இந்த அதீத மேய்ச்சல் அங்கு வறட்சியைத் தான் உண்டு பண்ணியது. இந்த வறட்சி நாளாக நாளாக அங்குள்ள பசுமையைக் காணமல் போக செய்ய அது மேலும் கடும் வறட்சிக்கான பாதையை உருவாக்கி பசுமையான சஹாராவை பாலைவனமாக மாற்றியிருக்கிறது. இது மட்டுமல்லாமல் புவியின் சுற்றுவட்டப்பாதையில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. சுற்றுவட்டப்பாதையில் மாற்றம் ஏற்படும் போது அது காலநிலையிலும் குறிப்பிடும் மாற்றத்தை உருவாக்குவதுண்டு. அப்படி சஹாராவின் வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றம் அங்கு பெய்யும் மழைப்பொழிவையும் பாதித்து இருக்கக்கூடும் என்கிறார் ரைட்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உண்மை என்னும் வகையில் இதே போன்ற பாதிப்பு அமேசான் காடுகளையும் தாக்கும் அபாயம் உண்டு. இதனால் புவியின் வெப்பமும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேலும் உயருவதற்கான வாய்ப்புண்டு என்பது ரைட்டின் கணிப்பு.