1994 ஆம் ஆண்டில், ப்ளூடூத் வயர்லெஸ் டெக்னாலஜி என்று அழைக்கப்பட்டஅமைப்பிற்கான அடித்தளங்களை அமைத்தவர் - அதாவது ப்ளூடூத்தை கண்டுபிடித்தவர் - ஜாப் ஹார்ட்ஸன்.10 ஆம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவியர்களை ஒன்றிணைத்த டேனிஷ் மன்னரான ஹரால்ட் ப்ளூடூத் என்பவரின் ஆர்வமூட்டும் பெயரிலிருந்து பிறந்த - ப்ளூடூத் உண்மையிலேயே எப்படி சாதனங்களை இணைக்கிறது?
ப்ளூடூத் எப்படி வேலை செய்கிறது? ப்ளூடூத் பயன்படுத்த பாதுகாப்பானது தானா?
உணரவில்லை என்றாலும் கூட உண்மை என்னவென்றால் நாம் அனுதினமும் வயர்லெஸ் தகவல்தொடர்பை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
ரேடியோ ரிசீவர்கள் மற்றும் டிவிகளானது நூற்றுக்கணக்கான கிமீ / மைல் தொலைவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை வானொலி அலைகளை கைப்பற்றுகின்றன. அதாவது காப்பர் கேபிள்களின் உதவி இல்லாமல் காற்றின் வழியாக - கண்ணுக்குத் தெரியாத - வானொலி அலைகளாக "தகவல்கள்"முன்னும் பின்னுமாக அனுப்பபடுகின்றன.
ப்ளூடூத்தும் கூட இதேபோன்ற ரேடியோ-அலை தொழில்நுட்பமே ஆகும். ஆனால் இது 10 மீ அல்லது 30 அடிக்கு குறைவான குறுகிய தூரங்களில் தொடர்புகொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, டிஜிட்டல் கேமராவிலிருந்து பிசி-க்கு புகைப்படங்களைப் பதிவிறக்குவதற்கும், வயர்லெஸ் மவுஸை லேப்டாப் உடன் இணைப்பதற்கும், ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெட்செட்டை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைப்பதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.
வயர்லெஸ் - எப்போதும் வயர்டு தகவல்தொடர்புகளை விட குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது.
பழைய 'ஸ்பை' திரைப்படங்களில், குறிப்பிட்ட இருவருக்கு நடுவே நடக்கும் உரையாடலை உளவாளி ஒருவர் ஒட்டுகேட்பாரே? ஞாபகம் இருக்கிறதா? ஆனால் உண்மை என்னவென்றால் பழைய ஸ்பை படங்களில் காட்டப்படுவது போல வயர்டு தகவல்தொடர்பை "பிரேக்" செய்வது ஒப்பீட்டளவில் மிகவும் கடினம். ஆனால் அதையே வயர்லெஸில் செய்வதென்பது வெளிப்படையாக மிகவும் எளிது.ஏனென்றால் வயர்லெஸ் தகவல் திறந்தவெளியில் முன்னும் பின்னுமாக உலவுகிறது.
மக்கள் பெரும்பாலும் ப்ளூடூத் மற்றும் வைஃபை ஆகிய இரண்டிற்கும் இடையே குழப்பமடைகிறார்கள், ஏனெனில், மேலோட்டமாக பார்த்தால், இந்த இரண்டுமே ஒரே மாதிரியான செயல்களைச் செய்வதுபோல் தோன்றும். உண்மையில், இவைகள் மிகவும் வேறுபட்டவை.
ப்ளூடூத் கணினிகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை மிகக் குறுகிய தூரங்களில் தற்காலிக வழியில் இணைக்கப் பயன்படுகிறது, ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது, சிறிய சக்தியைப் பயன்படுத்துகிறது மற்றும் "தானாகவே" இணைக்கிறது.
மறுகையில் உள்ள வைஃபை - கணினிகளுக்கும் இணையத்திற்கும் இடையில் மிகப் பெரிய அளவிலான தரவிற்காக, பெரும்பாலும் அதிக "தூரத்திற்காக" வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விரிவான பாதுகாப்பை உள்ளடக்கியது மற்றும் இது பொதுவாக அதிக சக்தியைப் பயன்படுத்துகிறது.