பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் பணமில்லா வர்த்தகம் என்ற கோஷம் ஆட்சியாளர்களின் மத்தியிலிருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு அதுவும் அடித்தட்டு மக்களுக்குத் தங்கள் சுதந்திரத்திலும், பொருளாதாரத்திலும் மூன்றாவது நபரின் தேவையில்லாத தலையீடு என்ற நம்பிக்கையே தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்த எண்ணம் அதிக அளவில் ஊழல் செய்து கணக்கில் வராமல் பணம் சேர்த்து வைத்திருக்கும் பெரும் வணிகர்கள், கொழுத்த அரசியல்வாதிகள் ஆகியோரிடமும் உள்ளது.
பிட் காயின் ஒரு கரன்சிதான். ஆனால் இது ஒரு மெய் நிகர் கரன்சி. இதன் வடிவத்தை நன்கு அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இந்தக் காயினை நாம் நம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பரிமாற்றங்கள் செய்ய முடியாதது. இது காற்றில், கணினியில் கண்களால் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு வகைப் பணப் பரிமாற்றம். இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிவர்த்தனைக்கானது. ஜப்பானியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை மெல்ல மெல்லக் காலூன்றி வருகிறது.
ஒரு பிட்காயின் = ரூ.18,050/= மட்டுமே. ஒரு பிட்காயின் = 350 அமெரிக்க டாலர் .
பிட்காயினை வாங்க, விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் பிட்காயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இதற்காக நமது நாட்டில், Unocoin - www.unocoin.com , Zebpay - www.zebpay.com , Bitxoxo - www.bitxoxo.com, Coinsecure - www.coinsecure.in ஆகிய இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை.
உண்டியல் மூலம் நாணயங்களைச் சேமித்து வந்த நம்மூர் மக்கள் கண்ணால் பார்க்கமுடியாத கையில் வைத்துச் செலவிடமுடியாத இந்தப் பிட்காயின் இந்திய பெரும்பான்மை அடித்தட்டு மக்களால் எந்த அளவுக்கு ஏற்கப்படும் என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால் வருங்காலத்தில் இந்தப் பிட்காயின் புழக்கம் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒரு சக்தியாக வளர்ந்து வருகிறது.
கிரெடிட் கார்டு மூலம் நாம் பொருள்கள் வாங்கும்போது நமக்குப் பொருள்கள் விற்கும் நிறுவனம் கிரெடிட் கார்டு நிறுவனத்திற்கு ஒரு தொகை தரகு பணமாகக் கொடுக்கிறது. ஆனால் இந்தப் பிட்காயின் முறையில் இந்தத் தரகு முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுப் பொருளுக்கு உரிய விலை மட்டுமே கொடுக்கப்படும் என்ற ஒரு விஷயம் நம்மைச் சற்று யோசிக்கவும் வைக்கிறது.
பிட்காயின் வர்த்தகத்தின் பலன்கள்:
மிகவும் வசதியானது. பிட்காயின் வர்த்தகத்தை வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செய்யலாம். விடுமுறைகள் கிடையாது. இதில் வங்கிகளுக்கோ, பணியாளர்களுக்கோ தேவையில்லை. எனவே, இது மிகவும் எளிதான மற்றும் வசதியான முறையும்கூட.
இதன் வர்த்தகமானது இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையேயோ நடக்கிறது. பரிவர்த்தனைக்கு இடையில் வங்கி போல நடுவில் ஒரு அமைப்பு இல்லை. நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டுமென்ற அவசியமோ இல்லை.
ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு பிட்காயின்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல மத்திய வங்கிகள் பிட்காயின் வாயிலாக இணையதள பணப்பரிமாற்றங்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. ஏனெனில், பிட்காயின் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற வழியான 'பிளாக்செயின்" பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுவதே காரணமாகும். ஆனால், பிட்காயின்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை வங்கிகள் ஊக்குவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மற்றும் அர்ஜென்டினாவை தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் பிட்காயின் வர்த்தகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றத்திற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கிரடிட் கார்டு போன்றவை தேவையில்லை.
கணக்கு வைத்திருப்பவரின் தகவலும் மற்றும் அக்கணக்கு சார்ந்த தகவல்களும் ரசியமாகவும், மறையாக்கம் (என்க்ரிப்ட்) செய்யப்பட்டும் பாதுகாக்கப்படும்.