நகர்ப்புறங்களில் கிரெடிட் கார்டு இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு மிக அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பயனர்கள் தங்களது அன்றாடச் செலவுகளை நிர்வகிப்பதற்கான முக்கிய கருவிகளில் ஒன்றாக கிரெடிட் கார்டுகள் உள்ளன. நகர்ப்புறங்களில் பணம் செலுத்துவதற்கான பொதுவான முறைகளில் ஒன்றாக இப்போது கிரெடிட் கார்டுகள் மாறிவிட்டன. ஆன்லைன் மூலமாகவும் நேரடி விற்பனையிலும் நமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகள் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளன.
கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் அதனுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் அட்டை ஆகும். அந்தக் கிரெடிட் கார்டை பயன்படுத்தி அந்த வாடிக்கையாளர் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையையோ விலைக்கு வாங்க இயலும்.
அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் அந்த வாடிக்கையாளர் தான் வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் உங்களது கிரெடிட் கார்டை எவ்வாறு பயன்படுத்தி அதிகப் பயன் பெறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, ஆன்லைன் ஷாப்பிங், மளிகை மற்றும் இதர செலவுகளுக்கு இப்போது சிறப்புச் சலுகைகள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு பொதுத்துறை வங்கியிடமிருந்து ஒரு குறிப்பிட்ட கிரெடிட் கார்டு மூலம் மாதத்திற்கு ரூ.20,000 செலவழித்தால், அதற்கான பயன்பாட்டின் முதல் ஆண்டில் ரூ.7,501 மதிப்புள்ள சலுகைகளை நீங்கள் பெறலாம். இந்த கிரெடிட் கார்டு அமேசான், நெட்மெட்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுடன் இணைக்கப்பட்டு 10 மடங்கு வெகுமதி புள்ளிகளை வழங்கும். அதேபோல, மற்ற எல்லா ஆன்லைன் தளங்களிலும் 5 மடங்கு புள்ளிகளையும் வழங்குகிறது. நீங்கள் உங்களது மாதாந்திர பரிவர்த்தனைகளில் பாதி அளவை மேற்கூறிய கூட்டாளர் தளங்களில் பயன்படுத்தினால் இதுபோன்ற சலுகைகளைப் பெறமுடியும். அதேபோல, ஒரு தனியார் வங்கியிடமிருந்து மாதத்திற்கு ரூ.20,000 செலவழிக்கும் குறைந்தபட்சம் ரூ.14,550 மதிப்புள்ள வருடாந்திர சலுகைகளைப் பெற முடியும்.
பூஜ்ஜிய வருடாந்திர கட்டணம் உள்ள கிரெடிட் கார்டையே பெரும்பாலும் விரும்புகின்றனர். ஆனால் கட்டணம் வசூலிக்கும் கிரெடிட் கார்டுகள்தான் வாழ்நாள் அடிப்படையில் நல்ல பயன்களைத் தருகின்றன. எனவே, ஒரு கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன் அதற்கான கட்டணத்தைக் காரணமாக வைத்து அதை நிராகரிப்பதற்கு முன், நீங்கள் அதன் மூலம் எவ்வளவு சலுகையைப் பெறுகிறீர்கள் என்று பார்க்க வேண்டும். பரிசுகள், போனஸ் வெகுமதி புள்ளிகள் போன்ற சலுகைகள் உங்களுக்கு அதிகமாகக் கிடைக்கலாம். உதாரணமா, ரூ.750 வருடாந்திர கட்டணம் செலுத்துவது உங்களுக்கு 2,500 போனஸ் வெகுமதி புள்ளிகளை (ரூ .1,250 மதிப்புள்ள பரிசாக மீட்டெடுக்கப்படலாம்) வழங்கலாம்.