தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.
ஹைப்போ தைராய்டிசம்
இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.
அறிகுறிகள்
சோர்வு
மோசமான செறிவு
வறண்ட சருமம்
மலச்சிக்கல்
குளிரை உணர்தல்
உடம்பில் நீர் தேங்குதல்
தசை மற்றும் மூட்டுகளில் வலி
மன அழுத்தம், மனச்சோர்வு
பெண்களுக்கு நீடித்த அல்லது அதிகமான அளவு மாதவிடாய் இரத்த போக்கு ஏற்படுதல்
காரணங்கள்:
உடலில் அல்லது தைராய்டில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், தைராய்டு அறுவை சிகிச்சை, கழுத்துப் பகுதியில் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, பிறக்கும் போதே தைராய்டு பிரச்சினைகளுடன் பிறப்பது, தைராய்டில் எரிவு (inflammation), குறிப்பிட்ட சில மருந்துகள், மிக அதிக அல்லது மிகவும் குறைவான அயோடின் மற்றும் தைராய்டை கட்டுப்படுத்தும் மூளையிலுள்ள பிட்யூடரி சுரப்பியில் நோய், மற்றும் குடும்பத்தில் தைராய்டு நோய் இருப்பது.
சிகிச்சை:
மருந்துகள் மூலம் இந்த ஹார்மோன் அளவை சரிசெய்ய முடியும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த மருந்தை தேவையைவிட குறைவாக எடுத்துக்கொண்டால் உங்கள் அறிகுறிகள் முழுவதும் குணமடையாமல் இருக்கும். அதிகமாக எடுத்துக்கொண்டால் தூக்கமின்மை, எடை குறைவு, பதட்டம், அதிக பசி, படபடப்பு, சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை ஏற்படும். அதனால் சரியான அளவு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. மருத்துவர் உங்களுக்கு மருந்து ஆரம்பித்து 6 - 10 வாரங்கள் கழித்து, மருந்தின் அளவை நிர்ணயம் செய்ய, இரத்தப் பரிசோதனை செய்வார். இதன் பின்பு வருடம் ஒரு தடவை இரத்தப் பரிசோதனை செய்யலாம்.
ஹைப்பர் தைராய்டிசம்
ஹைப்பர் தைராய்டிசம் தைராய்டு ஹார்மோனின் அதிகப்படியான உற்பத்தியை குறிக்கிறது. ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் பொதுவாக அதிகரித்த வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையவை. ஆனால் ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள் சற்று வித்தியாசமானவை.
அறிகுறிகள்
பதட்டம்
நடுக்கம்
வேகமான இதயத் துடிப்பு
சோர்வு
வெப்பத்தை தாங்க முடியாத நிலை
வயிற்றுபோக்கு
அதிகமாக வியர்த்தல்
கவனிப்பதில் பிரச்சினை
திடீரென எடை இழப்பு
காரணங்கள்:
‘கிரேவ்ஸ்’ நோய் எனப்படும் நோயால் பொதுவாக ஏற்படும். இது தவிர தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கட்டி அல்லது முடிச்சுகளாலும், எரிவாலும், தொற்றாலும் சில வகையான மருந்துகளாலும் ஏற்படலாம்.
சிகிச்சை:
மருந்து, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மருந்துகள், பிற மருந்துகள் என நோயின் தன்மை மற்றும் காரணத்தைப் பொறுத்து நபருக்கு நபர் தைராய்டு சிகிச்சை மாறுபடும்.
தைராய்டு புற்றுநோய்
தைராய்டு புற்றுநோய் ஆண்கள் அல்லது இளைஞர்களை விட வயது வந்த பெண்களிடையே மிகவும் பொதுவானதாக உள்ளது. 55 வயதிற்குட்பட்டவர்களில் சுமார் 2/3 வழக்குகள் உள்ளன. இந்த புற்றுநோய் கட்டிகளை ஆரம்ப கட்டத்திலேயே கவனிக்கும் போது பலன் கிடைக்கும்.
தைராய்டு கோளாறுகளை மருத்துவ சிகிச்சையுடன் நன்கு கட்டுப்படுத்த முடியும். அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.