புற்றுநோய் என்பது மனிதனை உருக்குலைக்க வைக்கும் ஒரு கொடிய நோயாகும்.இருதய நோய்க்கு அடுத்து புற்று நோயால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கின்றது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் எளிதாய் குணப்படுத்தப்படுகின்றது. சில வகை புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும்.சில அறிகுறிகளை நாம் ஒன்றுமில்லை என்று ஒதுக்குவதும் புற்றுநோய்க்கான அபாயத்தில் கொண்டு விடலாம். பொதுவில் அதிக சிகரெட் பிடிப்பவர்கள், அதிக மது பழக்கம் உடையவர்கள் ரத்த உறவுகளில் புற்றுநோய் பாதிப்பு உடையவர்கள், மிக அதிகம் வெயிலிலேயே இருப்பவர்கள் கண்டிப்பாய் சில அறிகுறிகளை ஒதுக்கவே கூடாது.
புற்றுநோய் செல்கள் என்பது முதலில் லேசாக தொடங்கி பிறகு உயிரணுக்கள் வரை பரவக் கூடியது. 30 செல் இரட்டிப்பான பிறகு செல்களின் கட்டியின் நிறை அளவிடப்படுகிறது. ஒரு கிராம் எடையும் ஒரு சென்டிமீட்டரைச் சுற்றியும் அளவிடப்படுகிறது.இந்த செல்கள் படிப்படியாக அவற்றின் சொந்த இரத்த நாளங்களை உருவாக்குகின்றன, அவை கட்டியுடன் சேர்ந்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகின்றன. அப்படியே கட்டி செல்கள் வளர்ந்து வளர்ந்து மற்ற உறுப்புகளுக்கு பயணிக்க ஆரம்பிக்கின்றன.
அறிகுறிகள்
உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.
1.குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு
2.முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்
3.நாக்கை அசைப்பதில் சிரமம்
4.மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணம்: தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு) சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
5.உடலில் கட்டி தோன்றுதல். புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. பரவிய பிறகுதான் வலி ஏற்படும்.
6.அவற்றின் நிறத்தில் மாற்றம்
7.காரணமில்லாமல் எடை குறைவு
8.பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு
புற்றுநோயைத் தடுக்க முடியுமா?
1.புகையிலைப் பொருட்களைப் (உதாரணம்: சிகரெட், பீடி, பான் வகைகள்) பயன்படுத்தாமை மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் ஒரு சேர இருப்பது தொண்டைப் புண்களின் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2.உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்தல்.
3.குறைந்த கொழுப்பு, அதிகக் காய்கறி, பழம், முழுமையான தானியங்கள் உட்கொள்ளுதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளைத் தவிர்த்தல்
4.சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாத்தல். சூரியக்கதிர் தடுக்கும் களிம்பு (sunscreen lotion) பயன்படுத்துதல் மற்றும் இதற்காகத் தகுந்த உடையணிதல்.
5.சுத்தமான சூழலில் இருத்தல்
6.வைரஸ்களால் ஏற்படும் குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.
சிகிச்சைமுறைகள்:
உடலில் கட்டி உள்ள இடம், நோய் பரவியுள்ள நிலை, நோயாளியின் வயது, உடல்நிலை போன்றவற்றைப் பொறுத்து சிகிச்சை வேறுபடுகிறது.மருத்துவர் கீழ்சொன்னவற்றில் ஏதாவது ஒரு முறையில் அல்லது ஏதேனும் இரண்டு முறைகளைக் கலந்து சிகிச்சை அளிப்பார். நோயைக் குணப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கவும், வாழ்க்கைத்தரத்தை (quality of life) மேம்படுத்தவும் சிகிச்சை மிகவும் அவசியம்.
அறுவைச் சிகிச்சை: இது கட்டியை அகற்றுவதற்காகச் செய்யப்படுவது.
கதிரியக்கச் சிகிச்சை: (Radiotherapy): இந்த சிகிச்சை முறையில் சக்தி வாய்ந்த கதிர் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் கொல்லப்படுகின்றன.
கீமோதெரபி (chemotherapy): மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாளமில்லாச் சுரப்பிகள் சிகிச்சை: புற்றுநோய் உயிரணுக்கள் நாளமில்லாச் சுரப்பிகளைக்கொண்டு வளர்வது தடுக்கப்படுகிறது.
வழக்கமான மருத்துவர்களின் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து நீடிக்கும் எந்தவொரு அறிகுறியும் ஆராயப்பட வேண்டும்.