யார் அந்த பென்னிகுவிக் ?அவர் என்ன செய்தார் ?

 பல லட்சம் ரூபாய் சொத்துக்களை விற்று லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்க அணை கட்டியவர் பென்னிகுவிக். வறட்சி தாண்டவமாடிய மாவட்டங்களில் முப்போகம் விளையவைத்து பஞ்சம் தீர்த்த பென்னி குவிக் தென் மாவட்ட மக்களின் கடவுள் என்றால் மிகையாகாது.


பென்னி குவிக் பிறப்பால் இந்தியர்தான். இவர் 1841 ஜனவரி15ல் புனோயில் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார். பென்னி குவிக் சென்னை அரசின் பொதுப்பணித்துறைப் பொறியாளர் மற்றும் செயலாளராக 1895 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்றிலிருந்து நியமிக்கப்பட்ட செய்தி இலண்டன் அரசுப் பதிவிதழில் (தி இலண்டன் கெசட்) வெளியிடப்பட்டது. இதன்படி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்குப் பணிக்கு வந்தார்.

நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.


மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குவிக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.


முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டில் அவர் கட்டி முடித்தார் பென்னிகுவிக். அணை கட்டுமானப் பணியின்போது பலர் உயிரிழந்தனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், காலரா வந்தும் பலர் பலியானார்கள். அவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல பல ஆங்கிலேயர்களும் கூட இருந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட என்ஜீனியர்கள், உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கான கல்லறை கூட இன்றும் அங்குள்ளது.

தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுவிக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுவிக் உருவச் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.