ஆதிதமிழரின் நாகரிகாக அடையாளம்

 தமிழ் பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ‘புகார் நகரம்’ என்ற பெயருடன் குறிப்பிடப்படும் இந்த ‘பூம்புகார்’ அல்லது ‘காவிரிப்பூம்பட்டிணம்’ எனப்படும் நகரமானது தற்போதைய நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு கிழக்கே 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
சோழ நாட்டின் முக்கிய நாகரிக அடையாளமாக, காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் வீற்றிருந்த பூம்புகார் நகரம் ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் கி.பி 500ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பில் இந்த வரலாற்று சிறப்புவாய்ந்த துறைமுகம் புதையுண்டு போனது.


அந்தவகையில் பூம்புகார் நகரம் இன்றும் ஒரு வரலாற்று தலமாக முக்கியத்துவம் பெற்று வீற்றிருக்கிறது. மிகத்தொன்மையான மண் சிற்பங்கள் மற்றும் தாழிகள் பூம்புகார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆதி நாகரிக நகரங்களில் ஒன்றாக இந்த பூம்புகார் நகரம் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

 

தற்போது 86,000 மக்கள் தொகையை கொண்ட ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் பூம்புகார் நகரத்தின் பெருமையை, பட்டினப்பாலை எனும் நூல் எடுத்துரைக்கிறது. கரிகாற்சோழன் ஆண்ட சோழ நாட்டின் பெருமை இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பழமையான இந்த நகர நுழைவாயில் அமைப்பு தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. இது1792ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டத்துவங்கப்பட்டு டேனிஷ் ஆட்சியாளர்களால் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நகரங்களில் காணப்படும் நகர வாயில்களை போன்று இது வடிவமைக்கப்பட்டிருப்பதால் கட்டிடக்கலை ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் ஒரு அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

மாசிலாமணி நாதர் கோயில் எனப்படும் இந்த புராதனமான கோயில் 1305ம் ஆண்டில் மாறவர்ம குலசேகர பாண்டியன் எனும் பாண்டியகுல மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்திய தமிழ் மண்ணின் கோயிற்கலை மரபின் உன்னதமான சான்றாய் இக்கோயில் காலத்தே நீடித்து கடலை நோக்கியவாறு வீற்றிருக்கிறது.

சிலப்பதிகார கலைக்கூடம் 7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியக வளாகம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தில் பிரதான கவர்ச்சி அம்சமாக பயணிகளை ஈர்க்கிறது. தமிழின் முக்கியமான பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தை கௌரவிக்கும் வண்ணம் தமிழக அரசால் 1973ம் ஆண்டு இந்த அற்புதமான கலைக்கூடம் நந்தவனம் போன்ற வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.

காப்பிய நாயகன், நாயகியான கோவலன் மற்றும் கண்ணகி சிலைகள் வளாகத்தின் வாசலிலேயே நம்மை வரவேற்கின்றனர். கலைக்கூட மாளிகையின் கோபுர வடிவமைப்பு 50 அடி உயரம் கொண்டதாக காட்சியளிக்கிறது. 8 அடி உயரம் கொண்ட கலசங்களும் கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளன.



சிலப்பதிகாரகாட்சிகள் இந்த கலைக்கூடத்தின் சுவர்களில் புடைப்புச்சிற்பங்களாக பொதிக்கப்பட்டுள்ளன. இவை மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் வடிக்கப்பட்டவையாகும்.

இருபுறமும் கண்ணகி மற்றும் மாதவி சிலைகள் வீற்றிருக்க சிலம்பு வடிவத்தில் அமைக்கப்பட்ட ஒரு தடாகம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது.

22 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மகரத்தோரணவாயில் அமைப்பு வளாகத்தின் வாசல்பகுதியில் கலையம்சத்துடன் காட்சியளிக்கிறது. சிலப்பதிகாரத்தின் பெருமையை பறை சாற்றும் இந்த கலைக்கூடம் நிதானமாக சுற்றிப்பார்த்து ரசிக்கவேண்டிய அம்சம் என்பதில் ஐயமில்லை.