56 ஆண்டுகளுக்கு முன் புயலின் தாக்கத்தால் சிதைந்த நகரமாக தனுஷ்கோடி காணமால் போன தினம் இன்று


இது நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம். இது சிறந்த துறைமுக நகரம், தீர்த்த யாத்திரை தலம் என பெருமைகளை நிரம்பக்கொண்டிருந்த நகரம். இன்று யாருமில்லாத, சொல்லப்போனால் முழுமையாக மறைந்து போன நகரமாக காட்சியளிக்கிறது. புயலின் அசுர தாக்குதலில் தன் சிறப்பை எல்லாம் தொலைத்து விட்டு, சிறுசிறு குவியல்களாய் பல நூறு மணல் மேடுகளில் புதைந்து கிடக்கிறது தனுஷ்கோடி நகரம்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது அதிகம் பழக்கத்தில் இருந்தது கடல் வழி பயணங்கள் மட்டுமே. அதன் பயணாக இந்தியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட கீழ்திசை நாடுகளுக்கு எளிதாக  செல்ல ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட  நகரம் தனுஷ்கோடி. 1964-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தெற்கு அந்தமானில் உருவான புயல் வழுவிழந்து இலங்கையை நோக்கி திரும்பியது. 

 

 

டிசம்பர் 22-ம் தேதி இலங்கையில் உள்ள தமிழர்பகுதிகளை சூறையாடிய அந்த புயல் தனது அகோர பசிக்கு தனுஷ்கோடியை விழுங்கியது டிசம்பர் 23 நள்ளிரவில். கடும் மழைக்கு மத்தியில் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களும் மற்றவர்களும் தங்களை விழுங்க காத்திருக்கும் ஆழிப்பேரலை பற்றி அறிந்திருக்கவில்லை.  அந்த ஆழிப்பேரலையில் சிக்கிய பாம்பன் தனுஷ்கோடி (வண்டி எண்:653) பயணிகள் ரயிலில் பயணித்த 115 உயிர்களையும் உள்வாங்கி கொண்டது. 7அடி உயரத்துக்கு எழும்பிய அலைகள் தனுஷ்கோடி ஊருக்குள் புகுந்து  ஆயிரக்கணக்கான உயிர்களை அள்ளிகொண்டு போனது. 

அங்கிருந்த அத்தனை கட்டடங்களும் பொங்கிவந்த கடல் அரசனுக்கு தலைவணங்கிப் போனதால் அந்த கட்டடங்களில் வாழ்ந்தவர்களின் உயிரற்ற சடலங்களையும், மூழ்கிபோன கட்டடங்களின் மிச்சசொச்சங்களையும் மட்டுமே புயல் விட்டு வைத்தது.
வரலாற்றுக் காலத்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் நள்ளிரவு 12.30.க்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆயிரக்கணக்கானோர் உயிரை பறித்தது. 

மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அழித்தது.
தற்போது இடிந்து போன, சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலின் எச்சங்களாய் தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டி வருகின்றன.
 

1964 க்கு பிறகு இது ஆளரவமற்ற தீவாக காட்சியளித்தது. மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக இதனை அறிவித்தது அரசு. இருபது வருடங்களுக்குப் பிறகு அகதிகள் வருகை, பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு என பதற்றமான பிரதேசமாக தனுஷ்கோடி மாறியது.
புயலின் அச்சுறுத்தல் இருப்பினும் பல நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போதும் தனுஷ்கோடியில்தான் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிதைந்த கட்டடங்களையும், அடிப்படை வசதியின்றி அல்லல்படும் அப்பாவி மீனவர்களின் வாழ்க்கைத் துயரத்தையும் மனதில் சுமந்து கொண்டுதான் செல்கின்றனர்.


தனுஷ்கோடிக்கு ரூ.55 கோடி செலவில் புதிதாக முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை மத்திய அரசு சாலை போட்டு அது, 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் 27 ந் தேதி இராமேஸ்வரம் வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதில் இருந்து அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அரிச்சல் முனை வரை செல்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் தற்போது புயலின் சிதைவுகளை பார்த்துச் செல்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க மத்திய அரசு தற்போது ஆசிய வங்கி உதவியுடன் ரூ 24,000 கோடியில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவெடித்துள்ளது. இந்த பணி தொடங்குமானால் மீண்டும் 1964-க்கு முன் போல் தனுஷ்கோடிக்கு குடியிருப்புகள் அரசு அலுவலகங்கள் ஆகியவை வரும்.

 

சிதலமடைந்த கட்டடங்களை நினைவுச் சின்னங்களாக உள்ளதை உள்ளபடியே பராமரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுகின்றன.

1964 புயலில் சேதமடைந்த பல கட்டடங்கள், ஒவ்வோர் ஆண்டும் மேலும் மேலும் சிதிலமடைந்து வருகின்றன.

குறிப்பாக கடந்த ஆண்டு புயலால் பாதிப்படைந்த தேவலாயம் இந்த ஆண்டு மேலும் சேதமடைந்துள்ளது. இதனை அரசு கண்டு கொள்ளவே இல்லை இந்த நிலை தொடருமானால் வரும் எதிர்கால சந்ததியினருக்கு தனுஷ்கோடி குறித்த வரலாறு தெரியாமலே போய்விடும் என்று தெரிவித்தார்.