எடை இழப்பு என்று வரும் போது புரோட்டீன் டயட் உண்மையிலயே பலனளிக்க கூடிய விஷயமாக உள்ளது. எடை இழப்பை தருவதில் புரோட்டீன் உணவுகள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். நீங்கள் உங்க உடம்பை ஒல்லியாக வைத்துக் கொள்ள விரும்பினால் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புரத உணவுகளை சாப்பிடும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் உங்களுக்கு அடிக்கடி பசிப்பதில்லை.
அனைத்துப் புரதத்திற்கும் ஒரே மாதிாி சொிமான தன்மை கிடையாது. புரதச் சொிமானமானது அதில் அடங்கியுள்ள அமினோ அமிலத்தின் அளவைப் பொறுத்தது. புரதத்தின் தரத்தை, அதில் அடங்கியுள்ள அமினோ அமிலத்தை மதிப்பிடுதல் முறை மூலம் மனிதனுக்கு தேவையான புரதத்தை அறிந்து கொள்ளலாம்.
புரதம் அடங்கிய உணவுப் பொருட்கள்
முட்டை
முட்டைகள் ஒரு ஆரோக்கியமான உணவின் தொகுப்பாகும். இது கூடுதல் எடையை குறைத்து அதே நேரத்தில் தசைகள் அதிகரிக்க உதவுகிறது. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு நல்ல புரதம் ஆறு கிராம் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவில் புரதமும், மஞ்சள் கருவில் ஒமேகா -3 நிறைந்த கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செலினியம் ஆகியவைகள் உள்ளன.
நட்ஸ்
நட்ஸ் வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இவை புரதத்தின் சிறந்த மூலமாக மட்டுமல்லாமல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. உப்பு மற்றும் வறுத்த நட்ஸ்களை தவிருங்கள். பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை அப்படியே எடுத்து பயன் அடையுங்கள்.
அசைவ உணவுகள்
சிக்கன் போன்ற அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. சிக்கனை எண்ணெயில் பொறித்து சாப்பிடக்கூடாது. ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நல்ல நாட்டுக்கோழியை வாரம் 300 - 500 கிராம் அளவுக்கு நீராவியில் வேகவைத்து, மசாலா தடவாமல் சாப்பிடலாம். சிக்கன் சாலட் செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் கோழி இறைச்சியில் 27 கிராம் புரதம் உள்ளது.
பருப்பு வகைகள்
துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது.முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.
யோகர்ட், சீஸ்
யோகர்ட் எனப்படும் தயிர், சீஸ் போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனினும் இதில் கொழுப்பு சத்தும் நிறைந்து காணப்படுவதால், இதனை அளவகாவே உண்ண வேண்டும். பால் பொருட்களில் 10 கிராம் அளவுக்கு புரதம் உள்ளது.
பிரக்கோலி
பிரக்கோலி தாவர அடிப்படையிலான புரதம் ஆகும். இதில் உடலுக்கு அவசியமான ஒன்பது அமிலங்களின் 8 அமிலங்கள் இந்த காய்கறிகளில் உள்ளது. இவற்றில் தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துகள் இருப்பதால் எப்பொழுதும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
மீன்
மீன்களில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளன.சிவப்பு இறைச்சியைப் போலன்றி, மீன் நிறைய புரதங்களை வழங்குகிறது, அதுவும் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்பு இல்லாமல் வழங்குவது இதன் சிறப்பு. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் முக்கிய மூலமாக இருக்கிறது.
சோயா பீன்ஸ்
புரதச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு சோயா நல்ல மருந்து. சோயாவை அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு சமையலில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரதம் உள்ளது.
கொண்டைக்கடலை
நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தாவர அடிப்படையிலான புரதத்துடன் கொண்டைக்கடலை காணப்படுகிறது. சுண்டலும் உங்க எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.