ரேபிஸ் வைரஸால் ஏற்படும் பாதிப்பு


செல்லப்பிராணிகளுக்கான பட்டியலை எடுத்தால் இன்றும் என்றும் பலரின் விருப்பமான பிராணி, நாய்கள்தான். மனிதர்களை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றார்போல நடந்துக்கொள்வது தொடங்கி, அந்த வீட்டுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது வரை நம்பிக்கைக்குரிய பிராணியாக விளங்கும் நாய்கள், சில நேரங்களில் நோய் ஆபத்துகளையும்கூட வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும். அப்படி நாய்கள் கொண்டுவரும் சூழலுள்ள முக்கியமான ஒரு பாதிப்பு, ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடியால் ஏற்படும் வைரஸ் பாதிப்பு.

ரேபிஸ் என்பது, மூளையைத் தாக்கும் ஒரு வைரஸின் பெயர். இந்த வைரஸ் ஒரு மிருகத்தைத் தாக்கும்போது, அதற்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படும். அந்த மிருகம் நம்மைத் தாக்கும் பட்சத்தில், நமக்கும் அது ஏற்படும். நாய் மட்டுமன்றி, காட்டுவிலங்குகள் நரி, ஓநாய், குதிரை முதலியவற்றைக்கூட இதுதாக்கும். வீட்டில் வளரும் பூனைகளையும் இது தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, நாய், பூனை போன்றவை கடித்துவிட்டாலோ, நகத்தால் பிராண்டினாலோ உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 


ரேபிஸை தடுப்பதற்கு தேவைப்படுவதெல்லாம், ஒரே ஒரு தடுப்பூசி. இந்த தடுப்பூசியை நாய்கள் போட்டுக்கொண்டால், அந்த நாய் அதன்பின் மனிதர்களையோ, உடனிருக்கும் நாய்களையோ கடித்தாலும்கூட நோய் பரவாது. முக்கியமாக, அந்த நாய்க்கும் பாதிப்பு ஏற்படாது. இந்தத் தடுப்பூசி, பிறந்து முதல் 100 நாள்களுக்குள் நாய்க்கு போடப்பட்டிருக்க வேண்டும். 100 நாள் எனக்குறிப்பிட காரணம், அதுவரை தாயிடமிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு இருக்கும். ஆகவே ஓரளவு அவை பாதுகாப்பாக இருக்கும். இருந்தும் ஒருசில சூழல்களில் 50 நாள்களேயான நாய்க்குட்டிக்குக்கூட பாதிப்பு உறுதியாக சூழலெல்லாம் உள்ளது என்பதால், விரைந்து நாய்க்குட்டிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்.பிறந்து முதல் 45 நாள்களுக்குள்ளே குட்டிகளுக்கு தடுப்பூசி போடவேண்டுமென்பது விதி. பின் 21 நாள்களுக்குப் பிறகு, தடுப்பூசியின் செயல்பாட்டை அதிகரிக்கும் மருந்தும் போடப்பட வேண்டும். அதன்பிறகு, வாழ்நாள் முழுவதும், வருடம் ஒருமுறை அவற்றுக்கு தடுப்பூசி போடவேண்டும்.

ரேபிஸூக்கு எதிரான இந்த தடுப்பு மருந்தை தனது குழுவினருடன் இணைந்து கண்டுபிடித்தது, பிரெஞ்சு விஞ்ஞானியான லூயிஸ் பாஸ்டர் என்பவர். இவர், செப்.28, 1895-ல் மறைந்தார். அவரது நினைவு நாள்தான், உலக ரேபிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி வந்து ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டாலும்கூட, இன்றும் 9 நிமிடங்களுக்கு ஒருவர் ரேபிஸ் காரணமாக இறக்கின்றார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதிலும் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்தான் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


ரேபிஸால் தாக்கப்பட்ட நாய்கள், 48 மணி நேரத்துக்குள் இறந்துவிடும் அளவுக்கு ஆபத்தானது. இதில் முதல் 24 மணி நேரம் இருட்டை பார்த்தால் பயப்படுவது, ஓரிடத்தில் பதுங்கிக்கொண்டு இருப்பது, மிகவும் சோர்வாக இருப்பது என்றிருக்கும். பின் அடுத்த 24 மணி நேரம், ஓரிடத்தில் அமரவே அமராது. ஓடிக்கொண்டே இருக்கும். அதேபோல அதிகமாக எச்சிலை உமிழும்; தூங்காமல் இருக்கும்; ஏதாவதொரு பொருளை கடித்துக்கொண்டே இருக்கும் (அவற்றின் பற்கள் உடைந்தாலும்கூட கடித்துக்கொண்டே இருக்கும்). இதில் எந்த அறிகுறி ஏற்பட்டாலும் அந்த நாய்க்குட்டி /நாயை, அதன் வளர்ப்பாளர்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், அவற்றிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். தனிமையில் இருக்கும் குழந்தைகளை நாய், பூனையோடு விளையாட விட்டுச் செல்லவேண்டாம்.