MINI Cooper SE electric காரின் சிறப்பம்சங்கள்

சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.


புதிய மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவும் இந்தியாவில் துவங்கப்பட்டது. ரூ.1 லட்சம் முன்பணத்துடன் புக்கிங் துவங்கியது. முதல் லாட்டில் 30 கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த அனைத்து கார்களும் சில மணிநேரங்களில் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது.

தோற்றத்தில் மினி கூப்பர் எஸ்.இ. மாடல் அதன் ஐ.சி.இ. மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், எஸ்.இ. மாடலில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், குரோம் பார்டர், புதிய இ பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், டூயல் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் உள்ளன.

புதிய மினி கூப்பர் எலெக்ட்ரிக் காரில் 32.6kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில், 270 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிவிடும்.


இதன் மொத்த ரேஞ்சு 235 முதல் 270 KM ஆகும். இதனை 50 KW சார்ஜ் பாயிண்ட் மூலம் சார்ஜிங் செய்தால் 0-80% 35 நிமிடங்களில் அடைந்துவிடும். 11KW சார்ஜிங் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்தால் 150 முதல் 210 நிமிடங்களில் முழு சார்ஜ் அடையும்.

இந்த காரின் இன்டீரியர் அதே பழைய கூப்பர் கார்களில் உள்ள இன்டீரியர் போல இருக்கிறது.ஆனால் எலக்ட்ரிக் கார் என்பதால் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது. இதன் பூட் மற்றும் இட வசதி பேட்டரி காரணமாக பெரிய அளவு பாதிக்கப்படவில்லை.