கிவி பழம் மிகவும் சுவையானதாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.கிவி பழம் பார்ப்பதற்கு சாப்பிட தோன்றாது. அதேப் போல் இது அனைவருக்குமே பிடிக்கும் பழமாகவும் இருக்காது. ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டால் நாம் நினைத்திராத அளவில் நன்மைகளைப் பெறலாம்.
சீனாவின் வடக்கு பகுதியில் தோன்றும் பெர்ரி வகை பழங்கள் தான் கிவி பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன; இந்த கிவி பழங்கள் 20 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக ஜீலாந்து பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் இக்கிவி பழங்கள் உலக நாடுகள் எங்கும் பரவ தொடங்கி, அந்தந்த பகுதிகளில் இப்பழங்களை விவசாயமே செய்ய ஆரம்பித்து விட்டனர்; கிவி பழங்கள் ஒவ்வொரு நாட்டிலும் விவசாயம் செய்யப்படும் அளவுக்கு பரவ, அவை வழங்கும் ஆரோக்கிய நன்மைகளே முக்கிய காரணம் ஆகும்.
கிவி பழம் அளவில் சிறியதாக இருந்தாலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை கொண்டது. கிவி பழத்தில் கலோரிகள் குறைவான அளவிலும், வைட்டமின் சி, ஈ, கே, ஃபோலேட் (போலிக் அமிலம்) மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்த்துக்கள் அதிக அளவிலும் காணப்படுகின்றன.
கொழுப்பின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிவி. இது இரத்த உறைதலைத் தவிர்க்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ரத்த குழாய்களில் உள்ள கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
கிவி செரிமானத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் ஃபைபர் தவிர, ஆக்டினிடின் என்ற நொதியைக் கொண்டுள்ளது. இது வயிற்றில் உள்ள உணவுகள் விரைவில் செரிமானமடைய உதவுகிறது. எனவே தான், அதிக உணவுக்குப் பிறகு ஒரு கிவியை உட்கொள்ளுங்கள் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இறைச்சி சாப்பிட்ட பின்னர் ஒரு துண்டு கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது.
கிவி பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் வளமான அளவில் நிறைந்துள்ளது. அதுவும் 69 கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் சுமார் 23.46 மிகி கால்சியம் நிறைந்துள்ளது.ஆய்வு ஒன்றில் ஒரு கிவி பழத்தில் ஒரு ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அளவில் வைட்டமின் சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். போதிய அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை எடுக்கும் போது, குடல் புற்றுநோய், இதய நோய், ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். இதில் உள்ள ப்ளேவோனாய்டு சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
உறங்குவதற்கு முன் கிவி பழத்தை உண்டால், அது நல்ல உறக்கத்தை அளிக்கும் மற்றும் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும் . ஒரு நான்கு வார ஆராய்ச்சியில் 24 மனிதர்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் கிவி பழங்களை உட்கொண்டார்கள்; ஆய்வின் முடிவில் அவர்களது உறக்கம் 42% சதவீத அளவிற்கு ஆழ்ந்து, மேம்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
பார்வை இழப்புக்கு காரணமான மாகுலர் (Macular) சிதைவிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க கிவி பழங்கள் உதவுகிறது. ‘தினமும் மூன்று வேளை கிவி பழங்களை உட்கொள்ளும்போது கண் சிதைவை 36 சதவீதம் அளவுக்கு குறைக்கிறது ’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.