சித்தரத்தையில் இருக்கும் மருத்துவ குணங்கள்

அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார் என்ற பழமொழி உண்டு.அரத்தை, சிற்றரத்தை, சித்தரத்தை என்று பேச்சுவழக்கில் சொல்லப்படும் இது பார்க்க இஞ்சி போன்று இருக்கும். மருந்தையே சுவையான உணவாக்கி எடுத்துகொண்டவர்கள் நம் முன்னோர்கள். அந்தவகையில் கைவைத்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது சித்தரத்தை. 



சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை,பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

நெஞ்சு சளி, கோழை, ஈளை, இருமல், நாட்பட்ட கபம் என்று எல்லாவற்றையும் குணமாக்குகின்ற சக்திவாய்ந்தது இந்த அரத்தை. அரத்தையை கசாயம் போட்டு குடித்தால், நுரையீரல்-தொண்டை நோயெல்லாம் ஓடிப்போகும்.

பற்களை சுத்தமாக துலக்கினாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்காது. சிலருக்கு வயிற்றில் புண் இருந்தாலும், உடலில் வாயு இருந்தாலும் கூட வாய்துர்நாற்றம் ஏற்படும். இதனால் நாக்கில் புண் வரக்கூடும். இதனால் பேசவும் முடியாமல் வாயை திறக்கவும் முடியாமல், உணவை மெல்லவும் முடியாமல் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு சிற்றரத்தை நல்ல தீர்வாக இருக்கும்.

நெஞ்சு சளி அதிகமாகும் போது அவை நுரையீரல் வரை தொற்றை உண்டாக்கிவிடக்கூடும்.கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

பெரியவர்கள் காய்ச்சல், தொடர் இருமல், தீரா தலைவலி போன்றவற்றை கொண்டிருந்தால் சிற்றரத்தை, அதிமதுரம், திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம், தேன் சேர்த்து குடித்துவந்தால் மாற்றம் விரைவில் கிடைக்கும். காய்ச்சல் குறையும். 



ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். 

பிறந்த குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கும் போது சிற்றரத்தையும் சேர்த்து உரைப்பார்கள். இவை உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியையும் கொடுக்கவல்லது. குழந்தைக்கு சுவாச நோய் வராமல் தடுக்கும். உடலுக்கு வலு கொடுக்கும்.

சிற்றரத்தையில் இருக்கும் வேதிப்பொருள்கள் வாந்தியை கட்டுப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. உடலில் புற்றுசெல்கள் பரவும் வீரியத்தையும் இவை கட்டுப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கிறது.

இனி உங்கள் வீட்டு மருத்துவ அஞ்சறைப்பெட்டியில் இவற்றையும் வைத்துக்கொள்ளுங்கள்.