கௌதமபுத்தர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.
ஆசைக்குக் காரணம் துன்பம் என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகாஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர்.
சித்தார்த்த கௌதமர் அவர்கள், கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா கௌதமா என்ற அரசருக்கும், மகாமாயா என்ற அரசிக்கும் மகனாக நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். புத்தர் பிறந்த போது, அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன. அவர் பிறந்து, ஏழு நாட்கள் கழித்து அவரது தாயார் இறந்ததால், அவர் மகாப்ரஜாபதி என்ற அவரது சகோதரியால் வளர்க்கப்பட்டார்.
சித்தார்த்தரின் ஜாதக கணிப்பின் போது, ‘அவர் உலகம் போற்றும் துறவியாக வருவார்’ என்று ஜோதிடர்கள் கூறியதால், அவரை சீரும், சிறப்போடு வளர்த்து அரசராக்க எண்ணிய அவரது தந்தை, அவருக்குக் கஷ்டம், பிரச்சனை மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிக்கு அர்த்தம் தெரியாத அளவிற்கு, அவரை அரண்மனையிலே வைத்து வளர்த்தார். தனது இளம் வயதில், செல்வ செழிப்பான ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார், சித்தார்த்தர். தனது இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்.
‘எங்கு தனது மகன் உலக இன்பங்களைத் துறந்து, துறவறம் பூண்டுவிடுவான்’ என்று அஞ்சிய அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை;
ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
ஒரு நோயாளி
அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
நாலாவதாக ஒரு முனிவன்
இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்து கொண்டார் சித்தார்த்தர். பின்னர் மனித வாழ்க்கையின் துன்பம், கஷ்டம் முதலியன ஏற்படுவதற்கான காரணம் என்ன என யோசித்து அதற்கு விடை தேடி மனைவி, குழந்தை, அரண்மனை மற்றும் அனைத்தையும் விட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம் இருந்தது.
தனது தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற உடுப்பில், அரண்மனையை விட்டு வெளியேறி, மகதாவின் தலைநகரான ராஜ்க்ரஹா என்ற இடம் நோக்கி முன்னேறினார். பின்னர், அந்த ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில், துறவிகள் வாழும் குகைகளை நோக்கிச் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற துறவியிடம், தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல முடிவு செய்தார். மேலும், அவர் உள்ளார்ந்த பேரின்பத்தை அடைவதற்காக யோகா மற்றும் சந்நியாசத்தின் தீவிர வடிவங்களைப் பயிற்சி செய்வதில் உறுதியாக இருந்தார். இந்தத் தொடர்ச்சியான சித்திரவதையால், அவர் முற்றிலும் உணவு உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவர் மிகவும் பலவீனமானார்.
ஒரு நாள், அவர் தியானம் செய்ய முயன்ற போது, சில நடனமாடும் பெண்கள் அவர் அமர்ந்த இடத்தைக் கடந்து சென்றனர். திடீரென்று அவர்கள் பாடிய பாடல் சித்தார்த்தருக்கு, ‘உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது போன்ற சுய சித்திரவதைகள் உதவப் போவது இல்லை’ என்று அவருக்குப் புரியவைத்தது. இதனால், அவர் தீவிர தியானம் மற்றும் பிற நடைமுறைகளைக் கைவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அவர் ‘உடலும், மனமும் எவ்வித வலியும், சித்திரவதையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும்’ என்றும் உணர்ந்தார்.
எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின் இழுப்பைக் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார்.
தனது கேள்விகளுக்கு பதில் தேடி பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்ற கௌதமர், ‘உண்மையைக் கண்டறிய ஒரே வழி, தியானம் என்றுணர்ந்தார். பின்னர், பனாரஸ் அருகே உள்ள போத்கயா காட்டிற்குச் சென்று, போதி மரத்திற்கு அருகிலுள்ள ‘அஜபலா’ என்னும் ஆலமர நிழலில் தியானத்தில் அமர்ந்தார். முழு ஒளியூட்டத்தை அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான இடையூறுகளையும், தொந்தரவுகளையும் கொடுத்தது . இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், 49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார். சார்நாத்தில் உள்ள மான் பூங்காவில், அவரது பிரபலமான உபதேசம் நடைபெற்றது. அன்றிலிருந்து அவர், ‘கௌதம புத்தர்’ என்றும், ‘புத்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் சடங்கு ஆற்றினர். எரிக்கப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப் பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு, பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன.