சாய்லுனின் வரலாறு

சாய் லுன் காகிததைக் கண்டறிந்த சீன அறிஞர். இவர் சீனாவின் அரசவையில் ஓர் அதிகாரியாக இருந்தார். அவர் தாம் தயாரித்த காகித மாதிரிகளைப் பேரரசர் ஹோ-டியினிடம் கி.பி.105 வாக்கில் அளித்தார். ஹான் அரச மரபின் அகராதி முறை வரலாற்றில் சாய் லுன் கண்டுபிடிப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இச்சாதனைக்காக அவர் சீனாவில்பெரிதும் மதிக்கப்பட்டார்.சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின் போது காகிதம் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும் உத்தியை சீனர்கள் நீண்ட காலம் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனால் 151-ல் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சீனக் காகிதத் தயாரிப்பாளர்களைப் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்ட், பாக்தாத்திலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று. இக்கலை படிப்படியாக அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. நவீன அச்சுக்கலையை ஜான் கூட்டன்பர்க் கண்டுபிடித்த பிறகு மேனாடுகளில் ஆட்டுத்தோலுக்குப் பதில் காகிதம் முக்கிய எழுது பொருள் ஆயிற்று. காகிதம் தயாரிக்க சாய் லுன் கையாண்ட அதே முறைதான் 1800-ல் எந்திர முறை புகுத்தப்பட்ட பிறகும் கூட அதே அடிப்படையில் மாற்றமின்றி காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.


இன்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. சீனாவில், சாய்லுன்னுக்கு முன்பு, பெரும்பாலான நூல்கள் மிகக் கனமாகவும், அலங்கோலமாகவும் இருந்தன. சில நூல்கள் பட்டுத் துகிலில் எழுதப்பட்டன. ஆனால், அந்த நூல்களுக்கு மிகுந்த செலவு பிடித்தது. மேனாடுகளில், காகிதம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான நூல்கள் ஆட்டுத் தோலில் அல்லது கன்றின் தோலில் எழுதப்பட்டன.

இதற்காக தோல் ஒரு தனி வகை செய்முறையின்படி பக்குவப் படுத்தப்பட்டது. அதற்கு முன்பு, கிரேக்கர்களும், ரோமானியர்களும், எகிப்தியர்களும் கோரையின் நாணற்புல் வகையிலிருந்து தயாரிக்கப்பட்ட 'பப்ரைஸ்' என்ற தாளில் நூல்களை எழுதி வந்தனர். இந்தத் தாளில் நூல்களை எழுதுவது மிகக் கடினமாக இருந்ததுடன், இதைத் தயாரிப்பதற்கு மிகுந்த செலவாகியது. எனவே, இந்தத் தாளுக்குப் பதிலாக ஆட்டுத் தோலும், கன்றுத் தோலும் எழுது பொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்று நூல்களும், மற்ற எழுத்துச் சுவடிகளும் மலிவாகவும், மிகப் பெருமளவிலும் தயாரிக்கப்படுகின்றன என்றால், அதற்குக் காகிதம் பயனுக்கு வந்ததே தலையாய காரணமாகும். அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப் படாதிருந்தால், காகிதத்திற்கு இன்றுள்ள அளவுக்கு பெரும் முக்கியத்துவம் ஏற்பட்டிருக்காது என்பது உண்மைதான். ஆயினும், அச்சடிப்பதற்கு காகிதம் போன்ற மலிவான எழுது பொருள் பெருமளவில் கிடைக்காது போயிருப்பின், அச்சு எந்திரத்திற்கு அத்துணை முக்கியத்துவம் ஏற்பட்டிருக்காது என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மேலை நாடுகள் காகிதத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்பு, அவை வளர்ச்சி வேகத்தில் சீனாவை விஞ்சின. எனினும், 18 ஆம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவை விட சீனா அதிகச் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது என்பதை மார்க்கோபோலோவின் எழுத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

 வேறொரு காரணத்தினாலும், மற்ற அனைத்துப் புத்தமைப்பாளர்களையும் விட சாய் லுன் தனிச் சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்கிறார். பெரும்பாலான கண்டுபிடிப்புகள், அந்தந்தக் காலத்திய ஒரு விளை பொருள் ஆகும். அவற்றை உண்மையில் கண்டுபிடித்தவர்கள் தோன்றாமலிருந்தால் கூட, அவை கண்டுபிடிக்கப் பட்டிருக்கும். ஆனால், இந்த உண்மை காகிதத்தைப் பொறுத்தவரையில் நிச்சயமாகப் பொருந்தாது. சாய் லுன் காகிதத்தைக் கண்டுபிடித்த 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஐரோப்பியர்கள் காகிதம் தயாரிக்கலானார்கள். சீனர்கள் காகிதம் தயாரிப்பதைப் பார்த்த பிறகுங்கூட மற்ற ஆசிய மக்கள் தாங்களே காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடிக்கவில்லை. காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டுப் பிடிப்பது உண்மையிலேயே மிகக் கடினமானதாக இருந்தது. ஓரளவு முன்னேற்றமடைந்த ஒரு பண்பாட்டில் யார் வேண்டுமானாலும் அதை கண்டுபிடிக்கக் கூடியதாக இல்லை. அருந்திறம் வாய்ந்த ஒருவரால் தான் அது கண்டு பிடிக்கப்படத்தக்கதாக இருந்தது. அத்தகைய அறந்திறம் வாய்ந்தவராக சாய்லுன் திகழ்ந்தார். காகிதம் தயாரிப்பதற்கு அவர் கையாண்ட அதே முறை தான் அடிப்படையில் மாற்றமின்றி இன்றும் கையாளப்படுகிறது.


சாய் லுன் வாழ்க்கை குறித்து அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை அவர் ஓர் அலியாக இருந்தார் எனச் சீனச் சான்றுகள் கூறுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் மன்னர் பெரும் மகிழ்ச்சி கொண்டு சாய் லுன்னுக்கு பதவி உயர்வு அளித்தார். அவர் பணக்காரராகவும் ஆனார். ஆனால் அரண்மனை சூழ்ச்சி ஒன்றில் சிக்கி அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. துன்பத்திற்குள்ளான சாய் லுன் நீராடி அலங்கார ஆடைகள் அணிந்து நஞ்சுண்டு மாண்டார் என சீன வரலாறு கூறுகிறது.