சிறுதானியங்களில் இருக்கும் நன்மைகள்

 ஆரோக்கியமான உணவுகள் என்று ஆய்வுகளே சொல்லகூடியவை நம் பாரம்பரியமான உணவுகள் தான். அப்படியான உணவில் சிறுதானியங்களுக்கு தனி இடம் உண்டு. முந்தைய தலைமுறைகளின் ஆரோக்கியத்தில் சிறு தானியங்களுக்கும் பங்குண்டு.


தானியங்களில் கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவை சிறுதானியங்கள். இதில் புரதம், நார்ச்சத்து,கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எளிதில் செரிமானம் ஆககூடியவை

திணை புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கும்.குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தினையைக் கூழாக்கித் தருவார்கள்; அது, தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். இது கபம் தொடர்பான நோய்களை நீக்கும். வாயுத்தொல்லையை விரட்டும். 

அரிசி, கோதுமையைவிட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. இதனால் எலும்புத் தேய்மானம், ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரைநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது. குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ராகியைக் களியாகச் செய்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் நீங்கும்; உடல் வலிமை பெறும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்; குடற்புண்கள் குணமாகும்; பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும். கர்ப்பிணிப் பெண்கள் தினமுமே சாப்பிட்டுவரலாம். கேழ்வரகில் கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.


சாமையில் அரிசியைவிடப் பலமடங்கு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மற்ற சிறுதானியங்களைவிட சாமையில் இரும்புச்சத்து அதிகம். இது, ரத்தசோகையை நீக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். சாமையில் உள்ள தாதுஉப்புகள் உயிரணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, சுவை மிகுந்த குதிரைவாலி, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த உதவக்கூடியது. இதன் கதிர் குதிரையின் வால் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் இதற்கு `குதிரைவாலி’ என்ற பெயர்க் காரணம் ஏற்பட்டது. இதில், இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு. வாயுக் கோளாறுகளைத் தீர்க்கும். 

உடலுக்கு அதிகச் சக்தியளிக்கும் வரகில், அரிசி, கோதுமையைவிட நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மைகொண்டது. மேலும் தானியங்களில் அதிகம் புரதம், தாது உப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன.சிறுநீர்ப் பெருக்கி; மலச்சிக்கலை போக்கும்; உடல்பருமனைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவும். கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு வரகு, வரம்.

வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும்; அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். வயிற்றுப் புண் வராமல் தவிர்க்கும். வளரும் குழந்தைகளுக்கும் பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் சிறுநீரைப் பெருக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த சோளம், உடல் எடை அதிகரிக்க உதவும். ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை. தோல் தொடர்பான நோய்கள், சொரியாசிஸ், தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம் ஏற்றதல்ல.சர்க்கரைநோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்னை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது. சிறுநீரைப் பெருக்கும்; உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். இதில் உள்ள பீட்டாகரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும்.