இரும்புத்துகள்கள் காந்தமாக்கப்படுவது எப்படி?


இரும்பை ஈர்க்கும் காந்தத்தைப் பார்த்தால் சிறுவர்களுக்கு எப்போதுமே குஷிதான். காந்தத்தை இரும்போடு ஒட்டவைத்து விளையாடுவது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு. இன்னும் சில சிறுவர்கள், இரும்புத் துகள்களைத் தாளில் கொட்டி, தாளின் பின்னால் காந்தத்தை வைத்து, திருடன்-போலீஸ் விளையாட்டுகூட விளையாடுவார்கள். சரி, காந்தத்தை எப்படித் தயாரிக்கிறார்கள்?

காந்தமாக்கப்பட வேண்டிய இரும்புத் துண்டுக்குள் இரும்புத் துகள்கள் தாறுமாறாக இறைந்து கிடக்கும். அதாவது, இரும்புத் துகள்கள் நவக்கிரகம் போல வெவ்வேறு திசையைப் பார்த்துக்கொண்டிருக்கும். இரும்புத் துகள்கள் இப்படித் தாறுமாறாகக் கிடப்பதால் இரும்பு சட்டக் காந்தத்துக்குரிய வடதுருவக் கவர்ச்சி, தென்துருவக் கவர்ச்சி ஆகியவற்றை இழந்து, இரண்டுக்கும் நடுவில் (நியூட்ரல் ஸ்டேஜ்) இருக்கும்.

இந்த இரும்புத் துகள்களை ஒரே திசையை நோக்கி இருக்கும்படி செய்துவிட்டால் போதும், அந்த இரும்புத் துண்டு காந்தாமாகிவிடும். சரி, தாறுமாறாகக் கிடக்கும் இரும்புத் துகள்களை ஒரே திசையை நோக்கி இருக்கும்படி எப்படிச் செய்வது?

1.ஒரு கையில் காந்தமாக்கப்பட வேண்டிய இரும்புத் துண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. இன்னொரு கையில் ஒரு காந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புத் துண்டின் ஒரு முனையில் காந்தத்தை வைத்து மறுமுனைக்கு அழுத்தி நகர்த்துங்கள் (சின்னக் குழந்தைகள் கைகளால் தரைமீது பொம்மை கார் ஓட்டி விளையாடுவது போல நகர்த்த வேண்டும்).

3.இப்படிச் செய்யும்போது காந்தம் நகரும் திசையை நோக்கி இரும்புத்துகள்கள் திரும்பும். பின்னர் ஒரே திசையை அடைந்து இரும்புத் துண்டினைக் காந்தமாக்கிவிடும். இப்படி உருவாக்கப்படும் காந்தங்களுக்குச் செயற்கை காந்தம் என்று பெயர். இந்தக் காந்தங்கள் பலவீனமாகவே இருக்கும்.

சீனர்கள் காந்தத்தை ‘உறவுக் கல்’என்று உரிமையோடு கொண்டாடுகிறார்கள். வீட்டில் இருக்கும் தாத்தா வாஞ்சையோடு தங்கள் உறவுகளை அரவணைத்துக் கொள்கிறார் அல்லவா? அதுபோல, காந்தம் இரும்புத் துகள்களை ஈர்த்துக்கொள்வதால் அதை உறவுக் கல் என்று அழைப்பதாகக் காரணம் சொல்கிறார்கள் சீனர்கள்.

உறவுக் கல் என்றால் உற்றார், உறவினர்கள் மட்டுமல்ல ஊரார்களையும் கொஞ்ச வேண்டுமல்லவா? ஆனால், காந்தம் இரும்பை மட்டும்தானே சொந்தம் கொண்டாடுகிறது. மற்ற எந்தப் பொருட்களையும் கவர்ந்திழுப்பதில்லையே, அது எப்படி உறவுக் கல்?

உண்மையில் காந்தம் இரும்பை மட்டுமல்ல, வேறு பல பொருட்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றது. ஒரு வலிமைமிக்க காந்தம் காற்றைக்கூடக் கவர்ந்திழுக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? காற்றை மட்டுமல்ல தண்ணீரைக்கூடத், தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் பெற்றதுக் காந்தம்.

காந்தங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று காந்தங்களைப் பற்றிய படிப்பு தனித்துறையாகவே வளர்ந்திருக்கிறது. மேலும் காந்தங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இயற்கைக் காந்தங்கள் சக்தி குறைந்தவை. அவற்றின் கவர்ந்திழுக்கும் ஆற்றலும் குறைவு. காந்தங்களின் இந்தக் குறைந்த அளவு கவர்ந்திழுக்கும் சக்தி பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆச்சரிய மூட்டுவதாக இருந்திருக்கிறது. குறைந்த அளவு சக்தியைப் பார்த்தே ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள் என்றால் இன்றைய செயற்கைக் காந்தங்களின் சக்தியைப் பார்த்தால் மிரண்டு போயிருப்பார்கள்.இன்று செயற்கை முறையில் உருவாக்கப்படும் காந்தங்கள் பல டன் எடையுள்ள இரும்புப் பொருட்களைத் தூக்கக்கூடிய சக்தி படைத்தவை.

இரும்புத் துண்டுகளுக்கு நான்கு புறமும் சுற்றப்பட்டுள்ள இரும்புக் கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ச்சப்பட்டுச் செயற்கைக் காந்தங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் செயற்கைக் காந்தங்கள் அதிக சக்தி கொண்டவை.இந்தச் செயற்கைக் காந்தங்கள்தான் காற்றுத் துகள்களைக்கூட இழுக்கும் சக்தி படைத்தவை. காற்றுத் துகள்களை எப்படி ஈர்க்கும்? 


மிக மெல்லிய பலூனுக்குள் ஆக்சிஜனை நிரப்பி அதை வலிமை யான இரண்டு செயற்கைக் காந்தங் களுக்குள் வைத்துப் பாருங்கள். அந்த பலூனுக்குள் இருக்கும் ஆக்சிஜன் காந்தத்தின் கவர்ச்சியால் பாதிக்கப்படும். உள்ளே இருக்கும் ஆக்சிஜன் பாதிக்கப்படுவதால் பலூன் தன்னுடைய வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். பலூனின் இரண்டு புறங்களிலும் உள்ள காந்தங்களின் இடைவெளியைக் கூட்டும் போதோ அல்லது குறைக்கும் போதோ பலூனின் உருவம் மாறுவதை நீங்கள் பார்க்க முடியும். ஒரு கட்டத்தில் வலிமையான இந்தக் காந்தங்களின் விசையால் ஆக்சிஜன் வேகமாகக் கவரப்படுவதால் பலூன் வெடித்துவிடும்.

செயற்கைக் காந்தம் காற்றைக்கூட ஈர்க்கிறது என்றால், அதற்குக் காரணம் அதிகமான அதன் கவர்ந்திழுக்கும் திறன்தான்.