இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக லடாக் திகழ்ந்து வருகிறது.லடாக் வடக்கில் குன்லுன் மலைத் தொடர்களும், தெற்கே மாபெரும் இமயமலைத் தொடருக்கும் இடையே அழகாய் அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு உட்பட்ட இந்த பகுதி மக்கள் தொகை பெரிய அளவில் இல்லாத அதே நேரம் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் விரும்பத்தக்க இடமாக காட்சியளிக்கிறது.
திபெத் சீன வழி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த போத்தி மொழியை கொண்ட மக்களின் பூர்விகம் இதுவாகும். இது சிறிய திபெத் என்றே அழைக்கப்படுவதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். பௌத்தர்களும், இஸ்லாமியர்களும் அடங்கிய பகுதியே இதுவாகும்.
தலைநகரமான லெஹ்ஹை தவிர லடாக்கிற்கு அருகாமையில் அல்ச்சி, நூப்ரா பள்ளத்தாக்கு, ஹெமிஸ், லமயுரு, சன்ஸ்கர் பள்ளத்தாக்கு, கார்கில், பன்கொங்க் சோ, சோ கர் மற்றும் சோ மோரிரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
அழகிய ஏரிகளும் மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும் மலை உச்சிகளும் இந்த இடத்தின் சில முக்கிய ஈர்ப்புகள்.கல்டன் நம்சொட், புத்த பூர்ணிமா, தோச்மோச்சே மற்றும் லோசர் திருவிழாக்களை லடாக் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில் பல சுற்றுலாப் பயணிகள் லடாக்கை மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
தோச்மோச்சே திருவிழாவின் போது புத்த துறவிகள் நடனம் புரிந்து, இறை வணக்கம் செலுத்தி, கெட்டது மற்றும் தீய சக்திகளிடம் இருந்து இந்த வட்டாரத்தை காக்க சடங்குகள் புரிந்து, இரண்டு நாள் இதை கொண்டாடுவர். திபெத்தியன் துறவிகளின் முக்கிய திருவிழாவாக சகா டவா கொண்டாடப்படுகிறது.
துப்காஸ் அல்லது சூப் நூடில்ஸ் மற்றும் மொமோஸ் அல்லது மாவு உருண்டைகள் இந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து உணவகத்திலும் கிடைக்கும்.
லடாக்கில் உள்ள மேக்னடிக் ஹில் மிகவும் பிரபலமானது. இங்கு நீங்கள் உங்கள் காரை நிறுத்தினாலும், ஜன்னலில் பார்க்கும்போது இடம் நகர்ந்து செல்வதைப் போலத் தோன்றும்.
லடாக்கில் உள்ள அரச மாளிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இது கிபி 1600 ஆம் ஆண்டு செங்கி நாம்கியாய் என்பவரால் கட்டப்பட்டது. இங்குள்ள டிரக் ஒயிட் லோட்டஸ் பள்ளி, திபெத்திலேயே மிகவும் பிரபலமான பள்ளிக்கூடமாகும். இதில் பல நூறு மாணவர்கள் படிக்கின்றனர்.
லடாக்கில் தங்குவதற்கென்று தனி ஹோட்டலை நீங்கள் தேட வேண்டியதில்லை. அங்குள்ள மக்களே அவர்களின் வீட்டில் உங்களுக்கு தங்க இடம் வழங்குவார்கள். அதற்கான வசதிகள் அங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மார்மாட் என்ற ஒருவகையான விலங்கு லடாக் பகுதியில் மட்டுமே பார்க்க முடியும். இவை பார்க்க சிறியதாகவும் அழகாகவும் இருக்கும்.
லடாக்கில் உள்ள கர்துங்கால் பாதை, உலகின் மிக நீளமான மலைப்பாதை ஆகும்,உலகின் மிக உயரமான பாலமும் லடாக்கில் தான் உள்ளது. சுரு மற்றும் தராஸ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள பைலி பாலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,062 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
ஸ்டாக் அரண்மனைக்குள் இருக்கும் ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த கிரீடங்கள், கலைப் பொருட்கள், விலை மதிப்புள்ள கற்கள், செப்புக் காசுகள், ஆபரணங்கள், வழிப்பாடு கருவிகள், தங்கஸ் அல்லது சமயஞ்சார்ந்த திபெத்தியன் பட்டு ஓவியங்கள் மற்றும் குலச்செல்வங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியம் இந்த வட்டாரத்தின் பண்டைய கால கலையையும் பண்பாட்டையும் விளக்குவதாக இருக்கும்.
சங்கர் கொம்பா, என்றழைக்கப்படும் சங்கர் மடம், லேவிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.அவலோகிடேஷ்வரா என்ற போதிசட்வாவின் சிலை (அனைத்து புத்தர்களின் இரக்க குணத்தை உள்ளடக்கியவர்) இந்த மடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த சிலைக்கு 11 தலைகள், 1000 கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கையிலும் கண்கள் இருக்கும்.
மொனாஸ்ட்ரி சர்க்கியுட் என்பது லடாக்கிலுள்ள ஒரு முக்கியமான இடம். இங்கு பர்கா மடம், திக்சே மடம், மாதோ மடம் மற்றும் ஹெமிஸ் மடம் போன்ற எண்ணற்ற மடங்கள் அமையப்பெற்றுள்ளன. ஹெமிஸ் மடம் லடாக்கிலுள்ள ஒரு மிகப்பெரிய மடமாகும். மிக பெரிய புத்தர் சிலைகளில் ஒன்று இங்கே நிறுவப்பட்டிருக்கிறது. இந்த சிலையை மக்கள் 11 வருடத்திற்கு ஒரு முறை தான் தரிசிக்க முடியும்.