கோழிக்கறி சாப்பிட்டால், சித்த ஆயுர்வேத முறைகள் குறிப்பிடும் வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் சொல்கிறது. உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் குணம் கோழிக்கறிக்கு உண்டு. பருவகாலச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கோழி இறைச்சியைச் சாப்பிட வேண்டும். வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தில், வெப்பத்தின் பிரதிநிதியான கோழிக் கறியை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அஜீரணத் தொந்தரவுகள் வரக்கூடும்.
முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது.
உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது. சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம். நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.
தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து. நாட்டுக் கோழியின் முழுப் பயன்களைப் பெற, கடைகளில் கிடைக்கும் உடனடி மசாலாப் பொடிகளைத் தவிர்த்து, அம்மியில் கைப்பக்குவத்தில் அரைக்கப்பட்ட மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.
பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா? குடோனுக்குள் சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை.
பிராய்லர் கோழிகள் சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. 100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது. கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது.
பதினொரு வயதுச் சிறுமி, இப்போது வளர்ந்த பெண்ணைப்போலத் தோற்றம் தருவதற்குப் பிராய்லர் கோழியும் ஒரு காரணம்தான். குறைந்த வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கு வெள்ளைக் கோழியில் உள்ள ஹார்மோன் கலப்படங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.
பிராய்லர் கோழிகள் விரைவாக வளர்வதற்காகக் கொடுக்கப்படும் வேதிப்பொருட்கள், மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் முதல் புற்றுநோய்வரை உண்டாக்கக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.