நிலவேம்புக் கசாயத்தின் நன்மைகள்

 


நிலவேம்பு... டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து எங்கு பார்த்தாலும் நிலவேம்பின் பெயர் அடிபடுகிறது.டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் குணப்படுத்தத் தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்பது வெறும் நிலவேம்பினால் மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல. அதில் ஒன்பது வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ``நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொடியில் நிலவேம்புடன் சுக்கு, பற்பாடகம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பேய்ப்புடல், மிளகு, சந்தனம் உள்ளிட்ட மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு மூலிகைக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள் இருந்தாலும் நிலவேம்பு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய தன்மை உண்டு.நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதை கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள்.இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.


நன்மைகள்

நமது உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமானது. இந்த கல்லீரல் தான் நமது உணவை செரிமானம் செய்யக்கூடிய பித்தநீரை சுரக்க செய்கிறது. நிலவேம்பு கசாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் அதிகமுள்ளன. மேலும் கல்லீரலில் உணவிலிருந்து பெறப்படும் ட்ரைகிளிசரைட் கொழுப்புச் சத்துக்கள் நிரந்தரமாக படிந்துவிடாமல் வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, அதன் செயல்பாட்டை சீராக்குகிறது.

டெங்கு ஜுரம் என்பது டெங்கு வைரஸ் சுமந்து திரியும் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது அவர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவி கடுமையான காய்ச்சல், உடல் வலி, ரத்தம் உரையும் நிலை குறைதல் ஆகியவற்றை உண்டாக்கி மரணத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடிய வியாதி ஆகும்.நிலவேம்பில் இருக்கும் வேதிப்பொருள் டெங்கு வைரஸ் கிருமிகளை அழிப்பதில் மிக சிறப்பாக செயலாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.


சில ஜுரங்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. சில சமயங்களில் இந்த ஜுரம், காய்ச்சல்கள் காரணமின்றி விட்டுவிட்டு ஏற்படுவதாகவும் இருக்கின்றன. இவ்வாறு இடைவெளி விட்டு ஏற்படும் மற்றும் காய்ச்சல்களுக்கான சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக நிலவேம்பு இருக்கிறது. 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை நிலவேம்பு குடிநீருக்கு உண்டு. இதை அடிக்கடி எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி உடல் நோய்வாய்ப்படுவது குறையும்.

வயிறுப்புண் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்த மருந்தாகும்.


தோலில் உண்டாகும் சொறி, சிரங்கு, கடி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை நிலவேம்பு மூலிகைக்கு உண்டு.இதற்கு நிலவேம்பு இலையினை அரைத்து சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் தோல் வியாதிகள் குணமடையும்.

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும்.

திராம்போசைட் என்பது நமது இரத்தத்தில் இருக்கின்ற உறைவணுக்கள் ஆகும். இந்த உறைவணுக்கள் நமது உடலில் ஏற்படும் காயங்களின் போது ரத்தம் அதிக அளவில் வெளியேறாமல் தடுப்பதில் உதவுகிறது. திராம்போசைட்கள் அதிகளவில் இருந்தாலும் அல்லது மிகக் குறைவான அளவில் இருந்தாலும், உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நிலவேம்பு கசாயம் அருந்துபவர்களுக்கு இதயத்தில் இந்த திராம்போசைட்கள் அதிகம் சேர்ந்து ரத்தம் உறைந்து விடாமல் தடுத்து இதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.