கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத்தலங்கள்

 

ஆங்கிலேயர்களால் 'கேப்  கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.கன்னியாகுமரியிலுள்ள  கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன.

விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான்   இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.


குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே. இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.

கன்னியாகுமரி பாண்டியர்கள், சோழர்கள், நாயகர்கள், சேரர்கள் போன்ற பல அரச சம்ராஜ்யங்களால் ஆளப்பட்டவை. இங்குள்ள கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலையும் இந்த சாம்ராஜ்யங்களின் கலை மற்றும் நாகரிகத்துக்கு மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

கன்னியாகுமரியில் புகழ் பெற்ற உணவு வகைகள் என்றால் அது கடல் உணவுகள் தான். காரசாரமான உணவுகள் இங்கே அதிகம் கிடைக்கும். தேங்காய் சேர்க்காத உணவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தேங்காயின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.


விவேகானந்தர் பாறை/திருவள்ளுவர் சிலை

விவேகானந்தர் பாறை என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது.இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய 3 பெருங்கடல்களும் சந்திக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது.அதிகாலையில் சூரியன் உதயமாவதும், மாலையில் ஆதவன் மறையும் அற்புத காட்சியும் இங்குதான் காண முடியும்.படகில் ஏறி கடலில் சவாரி செய்து விவேகானந்தர் பாறைக்கு செல்வது சுற்றுலா பயணிகளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்கும்.கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வந்தனர். இந்த இரு பாறைகளுக்கும் இடையேயான தூரம் சுமார் 75 மீட்டரே உள்ளது.திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். 


கன்னியாகுமரி கோவில்

குமரி அம்மன் அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன்  ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார்.இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. முனிவர் பரசுராமரால் இக்கோவில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காந்தி நினைவு மண்டபம்

காந்தி மண்டபம் தமிழ்நாட்டின் தென் எல்லை சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபமாகும். இம் மண்டபத்தில் உள்ள மைய கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது. இது காந்தியின் வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது.ஒவ்வொரு வருடமும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் சாம்பல் வைத்திருந்த இடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பாகும்.காந்தி நினைவகம் கன்னியாகுமரி கோயிலுக்கு மிக அருகாமையில் தான் உள்ளது. இந்த நினைவகத்தின் மற்றொரு சிறப்பு இங்குள்ள நூலகம். இங்கே நம் நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னால் வெளிவந்த பழைய புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் இதழ்களும் இருக்கின்றன. 


சித்தாற்றல் மலைக்கோவில்

இந்தப் பழங்கால ஜைன மத சிதரால் நினைவு சிற்பங்கள் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது.இந்த சிதரால் மலை சொக்கன் தூங்கி மலை எனவும் அழைக்கப்படுகிறது.இங்கு 9 ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.முன்னாளில் திருசரணத்துப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த ஊா் திகம்பர ஜைன மத துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது.