வெற்றிலை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தமிழர்கள் பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை தங்களது ஆரோக்கியத்திற்க்காக கடைப்பிடித்து வருகின்றனர். நமது முன்னோர்கள் வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகளை மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்ளும் அதில் அடங்கியுள்ளன.திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் விருந்து முடிந்ததும் முதியவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.



வெற்றிலை ‘Piper betle’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்டது. வேளாண்மை பல்கலைக்கழக தகவல்படி வெற்றிலையில் கற்பூரகொடி, கள்ளர்கொடி, ரெவெசி, கற்பூரி,எஸ்.ஜி.எம் 1, எஸ்.ஜி.எம் (பிவி) -2, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா என்ற வகைகள் உள்ளன.

இதற்கு தாம்பூலம்,நாகவல்லி,வேந்தன்,திரையல் போன்ற பல பெயர்கள் உள்ளன. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும்.கொடி வகையைச் சேர்ந்த இது,இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவு விளைகிறது.யாழ்ப்பாணத்திலோ ‘கிளுவை’ எனப்படும் மரங்களை நட்டு ,அதில் இதன் கொடியைப் படரச்செய்வார்கள்.சில இடங்களில் மூங்கில் கம்புகளையும் இதற்குப் பயன்படுத்துவார்கள். பொது மக்கள் மற்றும் கை வைத்தியம் செய்கிறவர்கள் வெற்றிலையை நிறத்தாலும், மணத்தாலும், சுவையாலும் வெற்றிலை மூன்று வகையாகப் பிரித்தறிகிறார்கள். குறைந்த மணமும் சற்று வெளிர் நிறமும், மிதமான காரச்சுவை உடையதையே பொதுவாக வெற்றிலை என்றும், சற்று கறுமை நிறமும் மிகுந்த காரமும் உடையதை கம்மாறு வெற்றிலை என்றும், சிறிது கற்பூர மணமும் நடுத்தர காரமும் உடையதை கற்பூர வெற்றிலை என்றும் அழைக்கிறார்கள்.

வெற்றிலையில் அடங்கியுள்ளவை:

 வைட்டமின் சி, வைட்டமின் பி1 என்னும் தையமின், வைட்டமின் பி3 என்னும் நியாசின், வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தேவையான வைட்டமினான ரிபோஃப்ளவின், கரோட்டின், தாவர வேதிகூட்டுப்பொருள்கள், ஆக்ஸினேற்ற தடுப்பு பண்பு கொண்ட பீனோலிக் கூட்டுப்பொருள், ஆக்ஸினேற்ற தடுப்பு குறித்து செல்களுக்கு சமிக்ஞைகளை கடத்தக்கூடிய ஃப்ளவோனாய்டுகள், புரதங்களை இணைக்கக்கூடிய டானின், நைரட்ரஜன் அணுக்களை அடிப்படையாகக் கொண்ட தாவர கரிம கூட்டுப்பொருளான அல்கலாய்டு, ஊக்கமருந்து குணம் கொண்ட ஸ்டீராய்டு ஆகியவை வெற்றிலையில் உள்ளன..

எப்போது எவ்வாறு தாம்பூலம் போட வேண்டும்

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுப்படுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துக்கொண்டால் நெஞ்சில் கபம் தங்காது.இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னொர்களின் கட்டளை.இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

சளி, இருமல் குணமாகும்

வெற்றிலையை தீயில் வாட்டி,அதனுள் ஐந்து துளசி இலைகளை வைத்து,கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து,10 மாதக் குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டுகள் வீதம் கொடுத்துவந்தால் சளி,இருமல் குணமாகும்.இதன் இலைச் சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து,தேன் கலந்து கொடுத்தால் குழந்தைக்களுக்கு உண்டான சளி,இருமல் போன்றவை குணமாகும்.

மலச்சிக்கல்

30 மில்லி லிட்டர் அளவு வெற்றிலைச் சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் அல்லது வெற்றிலையை இடித்து இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்தால் மலச்சிக்கல் குணமாகும். கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம்சாப்பிட்டுவந்தால், இரைப்பைகுடல்வலி, அசிடிட்டி,செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமாகும்.

நோய் எதிர்ப்புச் சக்தி
வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சரியான விகிதத்தில் உடலில் இருந்தால் நோய் வராது என்பதை விட நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கிறது

பசி எடுக்கும்.
  
 வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.

 
சர்க்கரையின் அளவு சீராகும்.

வெற்றிலை 4,வேப்பிலை ஒரு கைப்பிடி,அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து சிறிது நறுக்கி 500 மி.லி தண்ணீர்விட்டு,கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிக்கட்டி,தினமும் மூன்று வேளையும் உணவுக்கு முன்னர் 50 மி.லி குடித்துவந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

எலும்பு முறிவு

இன்று 30வயதிற்கு மேல் ஆனாலெ எலும்புகள் வலுவிழந்துவிடுகிறது.இப்போது வயதானவர்களுக்கு எலும்புகள் எளிதில் உடைந்து விடும் அபாயம் அதிகமாக உள்ளது.அந்த காலத்தில் தாம்பூலம் போடும் பழக்கத்தால் வயதானவர்களுக்கு எலும்புகள் வலிமையாக இருந்தது.

 

ஜீரண சக்தி

வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால்,ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.இதற்கு தான் விருந்துகளை முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.