'ஓநாய் நிலவு' நிலவோட பெயரா இது!

 எத்தனையோ நிலவை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.. 'ஓநாய் நிலவு' பற்றி கேட்டதுண்டா? அப்படி ஒரு நிலவை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது நாசா. நிலா, சந்திரன், மதி.. இப்படி நிலவை குறிக்க தமிழில் தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன. அதுவும் முழு நிலவு நாளில் வானில் பிரகாசிக்கும் பந்து போன்ற நிலவின் அழகை பார்த்தால் காகா கூட கவிதை பாடத் தொடங்கும்.



நிலவை வைத்து பல கதை பேசிக்கொண்டிருக்கும் சூழலில் 'ஓநாய் நிலவு' இது தான் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இரு பனிமலைகளுக்கு இடையில் பந்து போல் வானில் பிரகாசமாக மின்னுகிறான் சந்திரன்.

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்றால் அதற்கும் பதில் கூறியுள்ளது நாசா. இந்த புகைப்படத்துக்கு நாசா கொடுத்திருக்கும் கேப்ஷன் தான் ஹைலைட். இந்த முழு நிலவுக்கு பெயர் ஓநாய் நிலவாம்.


பெரும்பாலும் நிலவின் அழகை வர்ணித்து தான் சொல்வார்கள். ஆனால் வித்தியாசமாக அது என்ன ஓநாய் நிலவு என்கிறீர்களா? அதற்கும் அவர்களே விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதாவது டிசம்பர் மாத இறுதியில் பனிபடர்ந்த இரவு பொழுதில் வானில் தெரியும் முழு நிலவை 'ஓநாய் நிலவு' என அமெரிக்காவின் வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வரும் அல்கொன்கின் பழங்குடியினர் அழைப்பார்களாம்.

அதாவது டிசம்பர் மாத இறுதியில் பனிபடர்ந்த இரவு பொழுதில் வனப்பகுதியி பசியுடன் சுற்றித்திரியும் ஓநாய்கள் விநோதமாய் ஊளையிடுமாம். அதை வைத்தே இந்த முழு நிலவுக்கு ஓநாய் நிலவு என பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த நிலவை 'ஐஸ் மூன்' என்றும் அமெரிக்கர்கள் அழைக்கிறாகள்.


இந்தக் குளிர் காலத்தில் வரும் பெளர்ணமி என்பதால் இதற்கு இந்த பெயராம்.