சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து ஐந்தாவது கோளாக வியாழனும், ஆறாவது கோளாக சனியும் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் நெருக்கமாக வர உள்ளது.
1623 ஆம் ஆண்டு இதேபோல் வியாழன் கிரகமும், சனி கிரகமும் மிக நெருக்கமாக வந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய நிகழ்வு மிகப்பெரிய இணைப்பு என எம்பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் டிசம்பர் 21 ஆம் தேதியன்று வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக காணப்படும் என வான்வெளி அறிஞர்கள் கூறியுள்ளனர். அவை காண்பதற்கு ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் இருக்கும் என கூறப்படுகிறது.
வியாழன் பூமியில் இருந்து 88.6 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. சனி கோள் 162 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. இரு கோள்களுக்கும் இடைப்பட்ட தூரம் 73 கோடி கி.மீ. ஒரு டிகிரிக்கும் குறைவான தூரத்தில் இரு கோள்களும் வருகின்றன. பார்வை தூரத்தில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல தெரியும். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரு கோள்களும் நெருங்கும். 397 ஆண்டுகளுக்குப் பின் ஒரு டிகிரிக்கும் குறைவாக நெருங்குகின்றன.
1623 ஆம் ஆண்டில் இருந்து இந்த இரண்டு கிரகங்களும் இதுவரை நெருக்கமாக இருந்தது இல்லை. இரண்டு விண்வெளி கிரகங்கள் நெருக்கமாக வரும்போது அது இணைப்பு (conjunction) என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல் சனி மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிரகங்கள் நெருக்கமாக வரும் நிகழ்வை பெரிய இணைப்பு (Great conjunction) என்று அழைக்கப்படுகின்றன என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டிசம்பர் 21 ஆம் தேதிக்கு முன்பிருந்தே இரண்டு கிரகங்களும் படிப்படியாக நெருங்கி வருவது போல் தோன்றும் என கூறப்படுகிறது. டிசம்பர் 21 ஆம் தேதி உலகின் தென்மேற்கு பகுதியில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
டிசம்பர் 21, 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி கிரகங்கள் 2080 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி நெருக்கமாக வரும் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் அந்த நிகழ்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடப்பது போல் நெருக்கமாக இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் சனி மற்றும் வியாழன் கிரகம் நெருக்கமாக வரும் நிகழ்வை இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான முக்கிய நகரங்களில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு காணலாம் என கூறப்படுகிறது.