"நைஜீரியாவில் கடத்தப்பட்ட 344 சிறுவர்கள் மீட்பு!!"










நைஜீரியாவில் கடத்தப்பட்ட 344 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களைப் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நைஜீரியாவின் கட்சினா மாநிலத்தில் உள்ள கன்கரா பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்று வந்த 344 சிறுவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்களால் கடத்தி செல்லப்பட்ட அவர்கள் நீண்ட தூரம் நடைவழியாக அழைத்து செல்லப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்தனர்.

 

நைஜீரியாவில் போகோ ஹரம் மாதிரியான பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடு தீவிரமாக இருந்து வரும் நிலையில், இந்தக் கடத்தலில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதுஇருப்பினும் இந்தக் கடத்தலுக்கான காரணம் என்ன? இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை.


இந்நிலையில், அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் துரிதமான நடவடிக்கையை எடுத்ததன் மூலம் சிறுவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாகவும். கடத்தப்பட்ட அனைத்து குழந்தைகளும் வீடு திரும்பியுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சிறுவர்களை மீட்க பிணைத் தொகை ஏதேனும் கொடுக்கப்பட்டதா என்பது மாதிரியான விவரங்கள் தெளிவாக இல்லை.

 

'காலை மாலை என கணக்கே இல்லாமல் எங்களை அடித்தார்கள். தினமும் ஒருவேளை உணவு மட்டும் கொடுத்தார்கள். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். மிகுந்த சித்திரவதையை அனுபவித்துள்ளோம். அவர்கள் எல்லோரும் சிறார்களாகவே இருந்தனர். கையில் துப்பாக்கியை ஏந்தி இருந்தனர். அதோடு அவர்கள் போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் எங்களை சொல்லச் சொன்னார்கள். எனக்கு தெரிந்து அவர்கள் அந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் பெரிய துப்பாக்கியை ஏந்தியுள்ள வெறும் பொடியன்கள்' என தெரிவித்துள்ளார் கடத்தப்பட்ட ஒரு சிறுவன்.

சிறுவர்கள் பத்திரமாக வீட்டுக்கு திரும்பியதை பெற்றோர்கள் கண்ணீர் மல்க வரவேற்றது பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.

Tags