சுவனத்தின் பாதை 503: அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்..) அவதரித்த பொன்னான நேரம்


﷽ 

ஹஜ்ரத் இப்னுல் ஹாஜ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்  ரபீயுல் அவ்வல் மாதம் ஃபஜ்ருக்கு சற்று முன்பாக தான் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் பிறந்தார்கள் என்பது தான் மிகவும் பிரபலமான அபிப்பிராயம்.எனவே அந்நேரம் அளவற்ற சிறப்பு மிக்கதும் இன்னும் துஆ ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான பொன்னான நேரமாகும்.


வெள்ளிக்கிழமை அன்று துஆ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நேரம் உண்டு என ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.இமாம் தர்தூஷி (ரலி) அவர்கள் அந்த நேரத்தைப் பற்றி அஸர் முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரையில் ஆகும் என்று கூறுகிறார்கள்.

ஏனெனில் அதை வலுப்படுத்தும் விதமாக ஸஹீஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் ஒரு ஹதீஸ் வந்துள்ளது : அதாவது ஹஜ்ரத் ஆதம் நபி (அலை) அவர்கள் வெள்ளிக்கிழமை அஸருக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையிலாக படைக்கப்பட்டார்கள்.மேலும் அதை அடிப்படையாக வைத்து அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு யாரிடமும் பேசாமல் கிப்லாவை முன்னோக்கி அமர்ந்து திக்ரு,துஆ போன்ற வணக்கங்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள்.


எனவே ஆதம் நபி (அலை) அவர்களை படைக்கப்பட்ட நேரத்தில் இறைவனிடம் கேட்கப்படக்கூடிய துஆவை ஏற்றுக் கொள்வான் என்றால் (அண்ட சராசரங்களை படைக்க காரணப்பொருளாய் அமைந்த) கண்மணி நாயகம் ﷺ அவர்கள் அவனியில் அருட்பிளம்பாய் அவதரித்த அந்த ஃபஜ்ருக்கு சற்று முன்புள்ள பொன்னான நேரத்தில் இறைவனிடம் துவா செய்தால் தின்னமாக ஏற்றுக் கொள்வான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


{ நூல் : அல் மத்கல் லி இப்னுல் ஹாஜ் }

தஹஜ்ஜத் நேரத்தில் கேட்கப்படும் துஆ ஏற்றுக்கொள்ளப்பட காரணமே அந்நேரத்தில் தான் தங்கத் திருமேனி ﷺ அவர்கள் பிறந்தார்கள் என்பதாகும் என இமாம்கள் கிதாபுகளில் எழுதியுள்ளார்கள்..