வெட்டிவேரின் நன்மைகள்

             

  வெட்டிவேரை பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான்.நாட்டு மருந்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

வெட்டிவேர்(Chrysopogon zizanioides)புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம்.இதற்கு குருவேர், உசிர், வீராணம் என வேறு பெயர்களும் உண்டு. இதன் பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டில் இருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது. விலாமிச்சை வேர் என்று அறியப்படும் வெட்டிவேர் பாதுகாக்கப்பட வேண்டிய அபூர்வமான தாவரமாகும்.இதன் வேரை வெட்டி எடுத்ததும் புல்லையும் வேரையும் வெட்டி அதன் நடுவே உள்ள துண்டுப்பகுதியை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் இது வெட்டி வேர் என்ற பெயரைப்பெற்றது.

வெட்டி வேர் செடி 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. இதன் தண்டு நீளமாக குறுகிய இலைகளால் உயரமாக இருக்கும். வேர்கள் மண்ணுக்குள் எட்டு அடி ஆழம் வரை செல்லக் கூடியது.வெட்டிவேருக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. இது பல வழிகளில் மனிதர்களுக்குப் பயன்பட்டு வருகிறது.

வெயில் காலங்களில் உடம்பில் ஏற்படும் வியர்வை, துர்நாற்றத்தை நீக்க வெட்டி வேரினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, அந்த விழுதினை சுடு தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.கோடை காலங்களில் மண்பானையில் உள்ள நீரில் வெட்டிவேரை போட்டு வைத்துவிட வேண்டும்.அந்த தண்ணீரை நாள்தோறும் பருகி வந்தால் தாகம் தணிந்து உடல் சோர்வு நீங்கி உற்சாகம் வரும்.வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

 இதில் மருத்துவக்குணம் கொண்டதால் வெட்டிவேரில் பலவிதமான பாய், பொம்மைகள், செருப்புகள், மாலைகள், கால்மிதி, படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள், சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. வெட்டிவேரில் தயாரான தொப்பியை நறுமணத்துக்காகத் தலையில் அணிந்து கொள்ளலாம்.