2020 ஆம் ஆண்டில், ஆங்கிலமல்லாத மொழியின் சிறந்த திரைப்படமாக ஆஸ்கர் விருது பெற்ற பேராசைட் திரைப்படத்தை அடியொற்றி எடுக்கப்பட்டுள்ளது இந்த "ஸ்குயிட் கேம்" தொடர். சியோலில், நேரெதிர் சூழலில் உள்ள இரண்டு குடும்பங்களின் கதைகளைக் கூறும் இந்த பேரசைட் திரைப்படம் சிறந்த இயக்குநர் உள்ளிட்ட ஐந்து ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது.
சூதினால் தன் குடும்பச் சொத்தை அழித்த மனிதன் தான் சீயோங். அவன் கடன் சுமை காரணமாக தன் வயது போன தாயுடன் தங்கி வாழ்ந்து வருகிறான். அவன் மனைவியும் மகளும்அவனின் பரிதாபநிலை கண்டு பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள். மகளின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்கிக் கொடுக்க கூட தன் வயது முதிர்ந்த தாயிடம் கடன் வாங்கி செல்கிறான். சூதின் போதையில் அந்தப் பணத்தை குதிரை பந்தயத்தில் கட்டி தொலைக்கிறான். அவனுக்கு கடன் கொடுத்தவர்கள் வந்து அவனை இரத்தம் வரும் வரை அடித்து எச்சரிக்கை செய்து செல்கிறார்கள்.
கடன் சுமையை பார்ப்பதா? மகளை பார்ப்பதா? தள்ளாடும் நிலையில் இருக்கும் தாயை பார்ப்பதா? என்று கலங்கும் சீயோங் இடம், ரயில் நிலையத்தில் வைத்து மர்ம மனிதன் ஒருவன் "என்னுடன் ஒரு விளையாட்டு விளையாடி நீ வெற்றி பெற்றால் உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன், தோற்றால் நீ என்னிடம் அடி வாங்க வேண்டும் சரியா?" என்று ஆசை காட்டுகிறான்.
சீயோங் பலமுறை தோற்று அடி வாங்கினான். பின்னர் பணத்தை ஒரு மாதிரியாக வெற்றி கொள்கிறான். அதன் பிறகு அந்த மர்ம மனிதன் ஒரு அட்டையை கொடுத்து " நீ இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் இதைவிட பல மடங்கு விளையாடி உழைக்கலாம்" என விபரீத வலையில் சிக்க வைக்கிறான். சீயோங் அந்த வலையில் சிக்கி என்ன விளையாட்டுக்கள் எல்லாம் விளையாடினான் என்பதை பரபரப்புடன் சொல்லும் கொரிய நெட்பிளிக்ஸ் தொடரே, உலகெங்கும் வெற்றி நடைபோடும் "ஸ்குயிட் கேம்".
அதீத போட்டி மனப்பான்மையால் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை விட ஏற்றத் தாழ்வு, கல்வியில் பாகுபாடு, கலவரங்கள், மன உளைச்சல் மிக்க சமூகம் போன்ற எதிர்மறையான விளைவுகளே அதிகரிக்கும் என்பதை "ஸ்குயிட்கேம்" சிறுபிள்ளை விளையாட்டுகள் மூலம் அழகாக வலியுறுத்தியுள்ளது. மேலும் தென் கொரியாவின் சமூகப் பின்னணிகள் குறித்தும் இந்த " ஸ்குயிட் கேம் " வெப் தொடர் எடுத்துரைக்கிறது.