ஆன்லைன் சூதாட்டம் எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு தள்ளும் என்பதை சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரு சம்பவங்கள் வெளிக்காட்டியிருந்தன. அவற்றில் முதல் சம்பவம், மனைவி, மகன்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட வங்கி அதிகாரியின் செயல். அடுத்த சம்பவம், ஆன்லைன் சூதாட்டத்தால் கொள்ளையராக மாறிய ரயில்வே ஊழியர் சம்பவம்.
கடந்த 2020 நவம்பரில் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை செய்திருந்தது. அதிலிருந்து இச்சம்பவங்களை காண்போம். பின்வந்த நாள்களில், அந்த தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்தத் தடை நீட்டிப்பே, இப்படியான தொடர் சம்பவங்களுக்கு காரணமெனக்கூறி இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது சமூகவலைதளங்கள் மற்றும் பிற ஊடங்கள் வழியாக மக்களால் அரசிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அடுத்த சில வாரங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள், சீரழிந்த குடும்பங்கள் ஆகியவை குறித்த செய்திகளை வானிலை நிலவரம் போல தினமும் தெரிவிக்க வேண்டியிருக்கும்
ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஒரே தீர்வு திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது தான்.
மனநல மருத்துவர், “புகை, மது போல சூதும் மனிதர்களை அடிமையாக்கும் இயல்பு கொண்டது. அதுவும் ஆன்லைன் சூதாட்டத்தில், ஆரம்பத்தில் விளையாட்டு எளிதாக இருக்கும். சிறு தொகைகளை வெல்ல முடியும். ஊக்கத்தொகையும் கிடைக்கும். அதனால் அதிக அளவில் ஈடுபடுவார்கள். பிறகு, விளையாட்டு கடினமாகும். ஒரு ஆட்டத்தில் சிறு தொகை வென்றால், மற்ற பல ஆட்டங்களில் பெரும் தொகையை இழக்க நேரிடும். ஆனால் இழந்ததை மீட்க வேண்டும் என்கிற பணத்தேவை மட்டுமல்ல; ஈகோவும் தூண்டிவிடப்படும். இப்படித்தான் அப்பாவி மனிதர்கள் சூதாட்டத்தால் வீழ்த்தப்படுகிறார்கள்” என்கிறார்.
காவல்துறை அதிகாரிகள் கூறுவது இன்னும் அதிர்ச்சி! “ஆன்லைன் சூதாட்டம் விளையாடும்போது, நம்முடன் வேறு நபர்கள் விளையாடுகிறார்கள் என நினைக்கத் தோன்றும். ஆனால் நம்முடன் விளையாடுவது, கருவிதான். அதாவது ஏற்கெனவே சீட்டு விளையாட்டு புரோகிராம் செய்யப்பட்ட கருவி. அதாவது கம்ப்யூட்டர். நம்மிடம் எந்தெந்த கார்டுகள் இருக்கின்றன என்பது அந்தக் கருவிக்கும் தெரியும். நாம் எந்த கார்டை வைத்து விளையாடினாலும், நம்மைத் தோற்கடிக்கும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும்.இது தெரியாமல், ஏதோ சக மனிதர்களுடன் விளையாடுவதாக எண்ணி, பலரும் பணத்தையும் உயிரையும் இழக்கிறார்கள்.
ஆன்லைன் சூதாட்டம் என்பது வெறும் சூதாட்டம் அல்ல. உயிர்களைப் பலிவாங்கும் விபரீதம்!