புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்

 எந்த நல்ல பழக்கத்தையும் பழகுவது கடினம். விடுவது எளிது. தீய பழக்கமோ, எளிதில் ஒட்டிக்கொண்டுவிடும். ஆனால் விடுவது மிகமிகக் கடினம். இது புகை பிடிப்பதற்கும் பொருந்தும். ஆனால் புகைப்பதை விட்டுவிட வேண்டும் என்ற நோக்கம் தீவிரமானதாக இருப்பின், விட்டுவிட முடியும்.



அத்துடன் இது கண்டிப்பாக கைவிட வேண்டிய ஒரு தீய பழக்கம். புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது.

புகை பிடிக்க தூண்டுவதற்கான டிரிக்கர்ஸ் பல இருக்கின்றன. அவை என்னென்ன தெரிந்துகொண்டால் போதும் அவற்றிலிருந்து நாம் விரைவாக விடுபடலாம்.

`எமோஷனல் டிரிக்கர்ஸ்' (Emotional Triggers): 


மனஅழுத்தத்துடன் இருப்பது, மிகவும் மனநிறைவுடன் இருப்பது, அதிக பதற்றமாக உணர்வது, வேலை ஏதுமின்றி சலிப்புணர்வுடன் இருப்பது, தனிமையை உணர்வது, நெருங்கிய நபர்களுடன் சண்டையிட்டுக் கோபமாக இருப்பது போன்ற சூழலில் உடனடியாகப் புகை பிடிக்க வேண்டும் எனத் தோன்றும். இவர்களை `எமோஷனல் டிரிக்கர்ஸ்' என்பார்கள். ஆனால், ஆளைப் பொறுத்து இவை மாறுபடும். 


இவற்றிலிருந்து விடுபடுவது எளிது. எந்தவொரு உணர்வையும் கட்டுப்படுத்த தெரிந்தால் போதும். புகைப் பழக்கம் இல்லாத, அதேநேரம் உங்கள்மீது அக்கறையுள்ள ஒருவரிடம் உங்களது எமோஷனை பகிர்ந்துகொண்டால் போதும். தொடர்ந்து, சில நிமிடங்கள் மூச்சை உள்ளே இழுத்து வெளிவிடுவது மற்றும் மெலடியான பாடல்களைக் கேட்கலாம். குறிப்பிட்ட எமோஷனிலிருந்து வெளியே வந்ததும், வேறு ஏதேனும் வேலையில் உங்களை ஈடுபடுத்துங்கள். வேறு எந்த எண்ணமும் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.


* `சோஷியல் டிரிக்கர்ஸ்' (Social Triggers) : 


நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் புகைப்பது, பார்ட்டிகளுக்கு சென்றுவிட்டு புறத் தூண்டுதல்களால் புகைப்பது, பொது இடங்களில் மற்றவர்கள் புகைப்பதைப் பார்த்ததும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் புகைப்பது போன்ற சூழல்கள்தான் `சோஷியல் டிரிக்கர்ஸ்' எனப்படுகிறது. புகைப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தவுடன், வாடிக்கையாகப் புகை பிடிக்கச் செல்லும் இடத்தைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து சில நாள்கள் புகைப்பவர்கள் இல்லாத, சிகரெட் விற்பனை இல்லாத இடங்களில் நேரத்தைச் செலவிடுவது போன்ற சூழல்களை ஏற்படுத்த வேண்டும்.


* `பேட்டர்ன் டிரிக்கர்ஸ்' (Pattern Triggers):


டி.வி பார்ப்பது, வண்டி ஓட்டுவது, போன் பேசுவது போன்ற செயல்களை நாம் அன்றாடம் செய்துவருவோம். புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், வேகவேகமாக அந்த வேலையை முடித்துவிட்டு, புகை பிடிக்கச் செல்வதுண்டு. அன்றாடப் பழக்கங்களில் ஒன்றாக இது இருப்பதால், இத்தகைய காரணிகளை எதிர்கொள்வது அதிக சிரமமானது. காரணம், வேலை முடிந்தவுடன் புகை பிடிக்க வேண்டும் என மூளை தனது செயல்பாட்டை, தனக்குள்ளே பழக்கப்படுத்தி வைத்திருக்கும். இது,`பேட்டர்ன் டிரிக்கர்ஸ்' எனப்படும்.


சிலருக்குக் காபி குடித்தவுடன் புகைக்க வேண்டும் எனத் தோன்றும். அப்படிப்பட்டவர்கள் வழக்கமாகக் காபி குடிக்கும் இடத்தையும் நேரத்தையும் மாற்ற வேண்டும். தினமும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் டீ, காபி அருந்தலாம். டீ, காபி என்று இல்லாமல் ஜூஸ் வகைகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம். படிப்பது, எழுதுவது என மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம் அவர்களது எண்ணம் மாறும்.

புகைப்பழக்கத்தால் நமக்கு எற்படக்கூடிய பாதிப்புகள்

1. புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற ரசாயனம் அதைப் பயன்படுத்துபவர்களை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.


2. வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.


3. சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.


4. புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும்.


6. ‘இரண்டாவது உயிர்க்கொல்லி’ எனப் பெயர் பெற்றுள்ள புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானவர்கள் புகையிலைப் பொருட்களால் உயிரிழந்துள்ளனர்.


7. புகைப் பழக்கத்தால் இறப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே பலியாகின்றனர். 


நம்முடைய நடவடிக்கைகளை மாற்றலாம் அல்லது சில உணவு முறைகளை மாற்றலாம் 

எடுத்துக்காட்டுக்கு

முள்ளங்கியில் இருக்கும் மருத்துவ பலன்கள் தனித்துவம் உடையவை. அதிக புகைபழக்கத்தால் எற்படக்கூடிய அமிலத்தன்மையை குறைக்கும்

இஞ்சி துண்டை சாப்பிடுவதால் புகைபிடிப்பதால் உடலில் தங்கியிருக்கும் நிக்கோட்டினை வெளியேற்றும் 

இலவங்கப்பட்டை புகைபிடிப்பதை மறக்க வைக்க உதவும் 

அதிமதுரம் புகைபிடிப்பதை மறக்க வைப்பதோடு செரிமானத்தையும் அதிகரிக்கும்.