சைவ உணவுப் பிரியரோ அல்லது அசைவ உணவுப் பிரியரோ இரண்டு வகையினருமே விரும்பி உண்ணும் ஓர் உணவாக இருக்கிறது காளான் (Mushroom). உணவகங்களில் மஷ்ரூம் சூப், மஷ்ரூம் கிரேவி, மஷ்ரூம் பக்கோடா என விதவிதமாக ரசித்துச் சாப்பிட்டிருப்போம்.
நம்மில் பெரும்பாலானோர் காளான்களை வாங்கிவந்து வீட்டிலேயே சமைத்து ருசித்திருப்போம். பெரியவர்கள் சிறியவர்கள்வரை விரும்பி உண்ணும் காளானில் ருசியுடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன.
உணவுக் காளான் மனிதனுக்கு உணவாக மட்டுமல்லாமல் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதச்சத்தும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் இதில் இருக்கிறது. மேலும் சர்க்கரைச் சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, வைட்டமின்கள் இருக்கின்றன.
காளான் ரத்தசோகை போக்கும். நீரிழிவு நோயாளிகள் இதைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு படிவதை காளான் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள டிரை கிளிசரைடு, பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
காளானை உணவாக உட்கொள்வதன் மூலம் சத்துப் பற்றாக்குறையை போக்க முடியும். காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் உள்ளன.
காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.
காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.
காளானில் உள்ள வேதிப்பொருட்கள் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைச் சீர்செய்யும். மூட்டு வாதம் உடையவர்களுக்கு காளான் சிறந்த நிவாரணி. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றையும் காளான் சரிப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.