மகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்கில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (SSY) 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இந்திய தபால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஒரு பெற்றோர் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம். ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
இந்த சேமிப்பு திட்டமானது குழந்தை பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம்.பெண் குழந்தைகள் மட்டுமே சுகன்யா சமிர்தி கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள்.கணக்கு திறக்கும் போது, பெண் குழந்தைக்கு 10 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். SSY கணக்கைத் திறக்கும்போது, பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும்.இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும்.
இந்த திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது
குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.1000 முதலீடு செய்யத் தவறினால், சேமிப்புக் கணக்கு செயலிழந்து விடும். எனவே குறைந்தபட்சத் தொகையுடன் ஆண்டிற்கு ரூ.50 அபராதம் செலுத்தி, மீண்டும் செயல்படச் செய்து கொள்ளலாம்
பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு 18 வயது நிரம்பியதற்கான சான்று அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அளிக்க வேண்டும்.ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.
21 ஆண்டுகள் நிறைவடையும் போது SSY திட்டம் முதிர்ச்சியடைகிறது. முதிர்ச்சியடைந்ததும், நிலுவைத் தொகை, கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும். முதிர்ச்சியடைந்த பின்னர் SSY கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகை தொடர்ந்து வட்டி சம்பாதிக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 21 வயது காலம் முடிவதற்குள் பெண் குழந்தை திருமணமானால் கணக்கு தானாகவே மூடப்படும்.