ரோல்ஸ் ராய்ஸ் கார் உருவான கதை

 ஃபிரடெரிக் ராய்ஸ், என்கிற இங்கிலாந்து சிறுவனுக்கு கார்களின் மேல் அலாதி காதல். அதிகம் படிப்பறிவு இல்லாத ராய்ஸ் தனது இருபத்தி ஒன்றாவது வயதில், கார்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பட்டறையை இங்கிலாந்தின் சசெக்ஸ் நகரில் துவங்கினான். நாற்பதாவது வயதில்தான் அவனால் டெக்சாவைஸ் என்கிற காரை வாங்க முடிந்தது. அதை ஓட்டிப்பார்த்த ராய்ஸ்சுக்கு அந்த காரின் செயல் திறன் திருப்தி இல்லை. அப்போதுதான் தானே ஒரு காரை சொந்தமாக செய்தால் என்ன என்கிற ஆர்வம் வந்தது செயலில் இறங்கினான்.


1904 ம் ஆண்டு தன் கையாலேயே செய்த முதல் காரை ஓட்டி மகிழ்ந்தார் ராய்ஸ். அப்போதுதான் ராய்ஸுக்கு ஸ்ட்டூவர்ட் ரோல்ஸ் என்கிற கார் டீலர் அறிமுகனானார். ரோல்ஸ்,பெரும் பணக்காரர். அவரும் ராய்ஸின் காரை ஓட்டிப்பார்த்தார், அவருக்கும் அந்தக் கார் பிடித்துப்போகவே ராய்ஸுடன் சேர்ந்து கார் தயாரிக்கும் தொழிலில் இறங்கினார். 1906 ல் இங்கிலாந்தில் நடந்த கார் பந்தயத்தில் ரோல்ஸ்ராய்ஸ் வென்றவுடன் அதன் புகழ் நாடு முழுவதும் பரவி விட்டது.



மும்பையில் நடைபெற்ற ஒரு கார் பந்தய போட்டியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் சுலபமாக ஜெய்ததது. 'பியர்ல் ஆஃப் இந்தியா' என்று பெயரிடப்பட்ட அந்த காரின் திறனை பார்த்த குவாலியர் மகாராஜா 2ம் மாதவ்ராவ் சிந்தியா உடனே சொந்தமாக்கிக்கொண்டார். இதன்மூலம், இந்தியாவில் முதன்முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய பெருமை அவரையே சாரும். அவருக்கு பிறகு பல ராஜாக்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கத்தொடங்கினர்.


அழகும், கம்பீரமும், வேகமும் நிறைந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர இந்தியாவில் அப்போது இருந்த பணக்கரார்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.


நந்தகான் சமஸ்தானத்தின் மகாராஜா சர்வேஸ்வர தாஸ், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை வேட்டைக்காக பயன்படுத்தினார். பதுங்கி நிற்கும் விலங்குகளை தேடுவதற்காக அவர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் காரில் சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுயிருந்தன.

காரின் வெளியே பாதுகாவலர்கள் ஏறிக்கொண்டே வருவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல் அந்த மகாராஜா பயன்படுத்திய மற்றொரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் கூரையில் வைக்கோலான கூரை வேயப்பட்டு இருக்கும்.


இந்தியாவில் ராஜாக்கள் பயன்படுத்திய கார்களிலேயே அதிக விலையுயர்ந்தது பாட்டியாலா மாகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார் தான். ராஜா பூபேந்தரின் கார், தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. சர்வீஸிற்கு அக்கார் சென்றால் அதை சுற்றி ஆயூதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள். பாட்டியாலா மகாராஜா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் காரின் எண் பூஜ்யம் (0) என்பது குறிப்பிடத்தக்கது.


மைசூரை ஆண்ட மகாராஜாக்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் எண்ணிக்கை மொத்தம் 35. பாட்டியாலா மகாராஜாவிடம் இருந்த கார்கள் 38. ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்த இந்திய ராஜாக்களிலேயே முதலிடம் வகிப்பது ஹைதராபாத் நிஜாம் ஓஸ்மான் அலிகான் . அவரிடம் மொத்தம் 50ற்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன.

1907 ஆம் ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டுவரையில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை சுமார் 40,000. அதில் இந்தியாவில் விற்கப்பட்டவை சுமார் 1,000 கார்கள்.

ஒரு கார் வாங்க வேண்டும் என்று விரும்புகிறோம். விரும்பும் காரை தேர்வு செய்து வைத்துக் கொண்டு, ஷோரூமில் சென்று முன்பதிவு செய்து விடுகிறோம். கார் மாடலை பொறுத்து, சில நாட்களிலோ அல்லது சில வாரங்களில் கையில் டெலிவிரி பெற்று விடுகிறோம்.

ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அப்படி இல்லை. ஏனெனில், ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கும், எண்ண ஓட்டத்திற்கும் தக்கவாறு ஒவ்வொரு காரையும் ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்து கொடுக்கிறது. எனவேதான், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பிற கார்களிடத்தில் இருந்து அதிகம் வேறுபடுகிறது. இதனை ஆங்கிலத்தில் 'Bespoke' கார் மாடல்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக, முன்பதிவு செய்ததிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை டெலிவிரி பெறுவதற்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை பிடிக்கும். வாடிக்கையாளர் கொடுக்கும் கஸ்டமைஸ் தேர்வுகளை பொறுத்து இந்த காத்திருப்பு காலம் வேறுபடுகிறது. உதாரணத்திற்கு, ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை இந்தியாவில் டெலிவிரி பெறுவதற்கு 8 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை காத்திருப்பு காலம் தேவைப்படும்.

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அனைத்துமே மனித ஆற்றலின் மூலமாக உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாகமும் பணியாளர்கள் மூலமாகவே பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன. தயாரிப்பில் எந்திரங்களின் பயன்பாடு மிக குறைவு. இங்கிலாந்தில் உள்ள குட்வுட் என்ற இடத்தில்தான் இந்த கார்கள் தயாரிக்கப்படுகின்றன.