68 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்தின் வசமாகியுள்ளது. அரசின் விமான நிறுவனமாக செயல்பட்டு வந்த 'ஏர் இந்தியா', இந்திய விமான சேவையில் மகாராஜாவாக வலம் வந்தது. தனியார் விமான நிறுவனங்களின் வருகையால் ஏர் இந்தியா நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. அண்மைக்காலத்தில் அதன் நஷ்டம் ரூ.70,000 கோடியை எட்டிய நிலையில், ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
எனினும், ஓராண்டாக அதன் விற்பனை சாத்தியமாகாமல் இருந்த நிலையில், டாடா குழுமம் மீண்டும் ஏர் இந்தியா வாங்க ஆர்வம் தெரிவித்தது. ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது. இதன்மூலம், 68 ஆண்டுகளுக்கு முன் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா, தற்போது மீண்டும் அந்நிறுவனம் வசமே வந்துள்ளது.ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் விற்கப்பட்டாலும், அதன் கட்டடங்கள் உள்ளிட்ட ரூ.14, 718 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் அரசின் வசமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1932ஆம் ஆண்டில் ஜே.ஆர்.டி டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் விமானப் போக்குவரத்து பிரிவை உருவாக்கி அதன் கீழ் டாடா ஏர் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். முதலில் இந்த நிறுவனம் தபால்களை ஏற்றிச் செல்லும் சேவைக்காக உருவாக்கப்பட்டது.
இதற்காக ஜே.ஆர்.டி டாடா ஒற்றை இன்ஜின் கொண்ட de Havilland Puss Moths இரு விமானத்தை வாங்கிச் சேவையைத் துவங்கினார். மேலும் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தின் வர்த்தகம் விரிவாக்கம் செய்யத் தபால்களை டெலிவரி செய்யும் வர்த்தகம் இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனத்திடம் டாடா கைப்பற்றியது.
இதன் பின்பு அக்டோபர் 1932ல் டாடா ஏர் சர்வீசஸ் தனது தபால் டெலிவரி சேவையைக் கராச்சியில் இருந்து பாம்பே-வுக்குச் செய்யப்பட்டது. அதன் பின்பு மெட்ராஸ்-க்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விமானத்தைப் பிரிட்டன் விமானப் படையான ராயல் ஏர் போர்ஸ்-ன் பைலட்-ம் ஜே.ஆர்.டி டாடா-வின் நண்பருமான நெவில் வின்சென்ட் இயங்கினார்.
முதல் வருடத்தில் மட்டுமே இவ்விரு சிறிய விமானங்கள் வாயிலாகவே 1,60,000 மைல் பறந்து, 155 பயணிகள் சேவை அளித்து, 9.72 டன் அளவிலான தபால்களைக் கார்ச்சி - பாம்பே - மெட்ராஸ் ஆகிய இடங்களுக்கு டெலிவரி செய்தது. இதன் மூலம் சுமார் 60,000 ரூபாய் அளவிலான லாபத்தை 1932-1933 காலகட்டத்தில் ஜே.ஆர்.டி டாடா பெற்றார்.
டாடா ஏர் சர்வீசஸ் மூலம் பயணிகள் விமானச் சேவை சூடுபிடிக்கத் துவங்கிய காரணத்தால் பயணிகள் விமானச் சேவைக்காகவே ஜே.ஆர்.டி டாடா, டாடா ஏர்லையன்ஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். இதற்காக மைல் மெர்லின் என்ற 6 இருக்கைகள் கொண்ட விமானத்தை ஜே.ஆர்.டி டாடா வாங்கினார்.
1938ல் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தை டாடா ஏர்லையன்ஸ் ஆக மாற்றினார். இதன் பின்பு பயணிகள் விமானச் சேவையை மற்றும் தபால் பரிமாற்ற சேவை கார்ச்சி - டெல்லி - பாம்பே - மெட்ராஸ் - சிலோன் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மேலும் 2ஆம் உலகப் போரின் போது டாடா ஏர்லையன்ஸ், பிரிட்டன் நாட்டின் ராயல் ஏர் போர்ஸ் உடன் இணைந்து ராணுவ வீரர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செய்யப் பெரிய அளவில் உதவியது. இதோடு போரில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும், விமானங்களைப் பழுதுபார்க்கும் பணிகளிலும் டாடா ஏர்லையன்ஸ் பங்குபெற்றது.பின்பு ஜூலை 1946ல் பொது நிறுவனமாக மாற்றப்பட்டு முழுப் பயணிகள் சேவை நிறுவனமாக மாற்றப்பட்டது.
1953ல் இந்திய அரசு, ஏர் கார்பரேஷன்ல் சட்டத்தை அறிமுகம் செய்து ஜே.ஆர்.டி டாடா மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்த டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை அரசு கைப்பற்றியது. இதன் பின்பு டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்து தேசியமயமாக்கம் செய்யப்பட்டது.
2013ல் துவங்கிய முயற்சி இன்று முடிவடைந்துள்ளது, இந்திய அரசு டாடா-விடம் இருந்து கைப்பற்றிய நிறுவனத்தைத் தற்போது மீண்டும் டாடா குழுமம் கைப்பற்றுகிறது.